தன்னை ஏற்காதவர் பன்றி, நாய் என்றும் அதை விட இழிவானவர்கள் என்று ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் கூறினார்களா...?உண்மை பின்னணி என்ன?

எனக்கு மாறு செய்பவர்கள் பன்றிக் குட்டிகள் என்றும் அவர்களின் மனைவிமார்கள் நாய்களை விட இழிவானவர்கள் என்றும் மிர்ஸா கூறுகிறார். (அன்னஜ்முல் ஹுதா பக்கம்: 15) என்று சிலர் அப்பட்டமாக ஆட்சேபனை செய்து வருகின்றனர்.
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் அன்னஜ்முல் ஹுதா என்ற நூலிலோ வேறு ஏதாவது நூலிலோ தனக்கு மாறு செய்பவர்களைப் பற்றி இவ்வாறு கூறவே இல்லை.(இந்த நூலின் அசல் பக்கத்தை கீழே தரப்பட்டுள்ளது. அதில் இவர்களின் இந்த் ஆட்சேபனை இருக்கிறதா என்பதை கண்டு கொள்ளுங்கள்) ஹஸ்ரத் அஹ்மத் (அலை) மேற்கூறப்பட்ட நூலில் இவ்வாறு கூறுகிறார்கள்: "ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தரக் குறைவாகப் பேசுகின்ற எழுதுகின்ற (இந்த கடும் எதிரிகள்) காடுகளில் வாழும் பன்றிகளாக விட்டனர். அவர்களின் பெண்கள் நாய்களை விடவும் மோசமானவர்களாக ஆகிவிட்டனர். அவர்கள் நமது ஹஸ்ரத் நபிகள் நாயகத்தை ஏசினர். ஏன் ஏசினர் என்பது எங்களுக்கு தெரியாது. நாம் இந்த எஜமானர் (ஸல்) அவர்களை எதிர்பதையோ அல்லது புறக்கணித்து ஒதுக்குவதையோ நினைத்துக் கூட பார்க்க முடியாது. சிங்கங்கள் அல்லது ஓநாய்கள் நம்மை கடித்து துண்டு துண்டாக்கினாலும் சரி நான் அண்ணாரை விட்டு விலகமாட்டேன். 

இவ்வாறு ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசியவர்களுக்காக திருக் குர்ஆனின்படியே அவர்களுக்கு பதிலடி கொடுத்தார்கள். திருக் குர்ஆனில் சில கடும் எதிரிகளையும் போய்ப்படுத்துபவர்களையும் அவர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்துவதற்காக அல்லாஹ் அத்தீயவர்களை நாய்கள் என்றும் (7:117) கழுதைகள் என்றும் (62:6) குரங்குகள், பன்றிகள் என்றும் (5:61) கூறுகின்றான். இந்த சொற்கள் எல்லா மக்களையும் பார்த்து கூறப்பட்டவை அல்ல.
திருமறையின் இந்த நடைமுறையைப் பின்பற்றிதான் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் இஸ்லாத்தின் கடும் எதிர்களுக்காக கடும் சொற்களை பயன்படுத்தினார்கள். ஆனால் இந்த முல்லாக்கள் அந்த சொற்களை திரித்து வளைத்து முஸ்லிம்களுக்கு பொருத்திக் காட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
முஸ்லிம்கள் தான் இந்த தரம் கேட்ட முல்லாக்களின் பிடியில் சிக்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 
கடைசி காலத்தின் ஆலிம்களை பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "உலமாவுஹும் ஷர்ரும் மன் தஹ்த அதீமிஸ் ஸமாயி" அவர்களுடைய (சீர்குலைந்த முஸ்லிம்களுடைய) உலமாக்கள் வானத்தின் கீழ் மிகவும் கேட்டவர்களாக இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்கள். (மிஷ்காத்) மேலும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) கூறுகிறார்கள்: "என்னுடைய உம்மத்தில் பரபரப்பு உண்டாகும் ஒரு காலம் வரும். அப்போது மக்கள் தங்களது ஆலிம்களின் பக்கம் செல்வார்கள். அப்போது அந்த ஆலிம்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் தோற்றமளிப்பார்கள்." (கன்ஸுல் உம்மால்)
ஹஸ்ரத் ஷேய்க் அஹ்மத் ஸர் ஹிந்தி (முஜத்தித் அல்ஃபு சானி) தன்னுடைய காலத்திலுள்ள ஆலிம்களை பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள்: "ஆலிம்கள் உலக ஆசையில் மூழ்கி இருக்கின்றார்கள். எல்லோரையும் விட கொடியவரும், துரோகிகளும், திருடர்களும் இந்த கெட்ட ஆலிம்களேயாவர். இப்படி இருந்தும் இவர்கள் தங்களை மக்களுடைய வழிகாட்டிகளாகவும், எல்லோரையும் விட உயர்ந்தவர்களாகவும் காட்டி நடிக்கிறார்கள். என்னுடைய ஒரு நண்பர் ஒரு கனவில் ஷைத்தான், மக்களை வழி கெடுக்காமல் உட்கார்ந்திருந்ததாக பார்த்தார். அதன் காரணத்தைப் பற்றிக் கேட்டதில் இக்காலத்திலுள்ள ஆலிம்கள் என்னுடைய வேலையை (மக்களை வழி கெடுத்தலை) ஏற்றிருக்கிறார்கள் என்று ஷெய்த்தான் விடையளித்தான். இன்று ஷரியத்திற்கு எதிரான எல்லா நடைமுறைகளுக்கும் சமுதாயத்தில் பரவியிருக்கும் எல்லா கேடுகளுக்கும் காரண கர்த்தாக்கலிந்த சீர் கெட்ட ஆலிம்கள்தான் என்பது ஒரு உண்மையாகும்." (மக்தூபாதே இமாம் ரப்பானி பாகம் 1, பக்: 74)
12 ஆம் நூற்றாண்டின் மூஜத்திதான ஹஸ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தஸ் (ரஹ்) கூறுகின்றார்கள்: "யூதர்களுடைய முன்மாதிரியை காண நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால் உலக ஆசையில் மூழ்கி இருக்கும் இந்த சீர்கெட்ட ஆலிம்களை பார்க்கவும்." (அல்பவ்ஸுல் கபீர் பக்: 10)
ஹஸ்ரத் ஷைக் முஹியூத்தீனிப்னு அரபி (ரஹ்) அவர்கள் தம்முடைய ' ஃபுதுஹாத்தே மக்கியா என்னும் நூலில் இவ்வாறு கூறியுள்ளார்கள்: "இமாம் மஹ்தி தோன்றினால் அவருடைய மாபெரும் எதிரிகள் ஆலிம்களும் ஃபுகஹாக்களும் ஆவார்கள்." (ஃபுதுஹாத்தே மக்கியா பாகம் 2 பக்: 242)
எனவே இந்த காலத்தில் தோன்றிய வாக்களிக்கப்பட்ட மஹ்தியை ஆலிம்கள் புறக்கணித்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால் அதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

No comments

Powered by Blogger.