ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களுக்காக இந்த வானம் பூமி படைக்கப்பட்டுள்ளது என்பது காதியானிகளின் கொள்கையா...?

ஆட்சேபனை செய்யும் ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) அவர்களின் எதிரிகள் இவ்வாறும் ஆட்சேபனை எழுப்புகிறார்கள், இந்த வானமும் பூமியும் மிர்ஸா காதியானிக்காக படைக்கபட்டுள்ளனவாம்..இது காதியானிகளின் கொள்கையாம்..என்று ஆட்சேபனை செய்கின்றனர்..
பதில்: (நஊதுபில்லாஹ்...!) ஹஸ்ரத் காத்தமுல் அன்பியா முஹம்மத் (ஸல்) அவர்களின் ஹதீஸே குதுஸியில் "லவ் லாக லமா கலக்துல் அஃப்லாக்" என்று வருகிறது. அதாவது உம்மை படைக்கும் நோக்கமே இல்லாதிருந்தால் நான் இந்த உலகத்தை படைத்திருக்க மாட்டேன் என அல்லாஹ் கூறுகிறான். இந்த ஹதீஸே குத்ஸியை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் நூற்றுக்கு நூறு அப்படியே ஏற்றுக் கொள்கிறது.
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் ஹக்கீகதுல் வஹீ என்ற தமது நூலில் 99 ஆம் பக்கத்தில் இந்த இறை அறிவிப்பை குறிப்பிட்டுள்ளார்கள். அதே பக்கத்தின் அடிக்குறிப்பில் இதற்கான விளக்கத்தையும் தெளிவுபடுத்தி எழுதியுள்ளார்கள்:

"ஒவ்வொரு மகத்தான சீர்திருத்தவாதியின் காலத்திலும் ஆன்மீகமான முறையில் புதிய வானம், புதிய பூமி உருவாக்கப்படுகிறது. அதாவது அந்த சீர்திருத்தவாதியின் குறிக்கோள்களை நிறைவேற்றும் பணியில் வானவர்கள் அமர்த்தப்படுகிறார்கள். மேலும் பூமியில் பாக்கியமுள்ள இயல்புடையவர்கள் உருவாக்கப்படுகின்றனர். எனவே இது அதைத் தான் சுட்டி காட்டுகிறது." (ஹக்கீகதுல் வஹீ, பக்கம் : 99 இன் அடிக்குறிப்பு)

இந்த அண்ட சராசரங்கள் அனைத்தும் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்களுக்காக, அதாவது எந்த உயர்ந்த நோக்கங்களுக்காக ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ் படைத்தானோ, அந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக படைக்கப்பட்டுள்ளன. அதற்காகவே ஒவ்வொரு நபியும் உலகத்திற்கு வந்தார்கள். இந்த வகையில் ஒவ்வொரு நபியும் தத்தமது காலத்தில் உம்மை படைக்கும் நோக்கம் இல்லாதிருந்தால் இவ்வுலகத்தை படைத்திருக்க மாட்டேன் என்ற வார்த்தைக்கு பொருந்துபவராக இருக்கிறார்கள்.

இவ்வாறு ஒவ்வொரு மகத்தான சீர்திருத்தவாதியின் காலத்திலும் இந்த ஹதீஸே குத்ஸி நிறைவேறி ஹஸ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. உதாரணமாக, ஹஸ்ரத் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"இறை நேசர்களுக்காகவே வானம் பொழிகிறது, பூமி விலைகிறது. மேலும் அவர்கள் நாடுகளுக்கும், மனிதர்களுக்கும் பாதுகாவலர்களாக விளங்குகிறார்கள். அவர்களின் காரணமாகவே படைப்பினங்களிடமிருந்து சோதனைகள் விலகுகின்றன."
                                                                                          (அல்-ஃபத்ஹுர் ரப்பானி, பக்கம்: 71)

இந்த கோணத்தில் ஹஸ்ரத் அஹ்மத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் தொடர்பாகவும் அல்லாஹ் இந்த வஹியை அறிவித்திருக்கும்போது, வானம், பூமி ஆகியவற்றிலுள்ள அனைத்து படைப்பினங்களும் மிர்ஸா காதியானிக்காக வேண்டி மட்டுமே படைக்கப்பட்டிருக்கின்றன என்பது காதியானி கொள்கை என குறிப்பிட்டிருப்பது மாபெரும் அபாண்டமாகும். இதனை ஆட்சேபனைக்குரியதாக சித்தரித்து காட்டுபவர்கள், ஹஸ்ரத் அப்துல் காதிர் ஜெய்லானி (ரஹ்) அவர்களின் காலத்தில் இருந்திருந்தால், அவர்களின் மீதும் இதே அபாண்டத்தை தான் சுமத்தியிருப்பார்கள் என்பது அப்பட்டம்.

No comments

Powered by Blogger.