ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் தனது நூலில் "தன்னை ஏற்காதவர் நரகவாசி ஆவார்" என்று கூறினார்களா?

சிலர் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் தனது நூலாகிய ரூஹானி கஜாயீன் பாகம் 11 பக்கம் 62 இல் அவரை ஏற்காதவர்கள் நரகவாசிகள் என்று கூறியுள்ளார் என்று ஆட்சேபனை செய்கின்றனர்.
       இது ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்களின் கூற்றை முறை கேடாக மாற்றியமைத்து வெளியிடப்பட்ட, கூறப்பட்ட ஒன்றாகும். அன்னார் தம்மை ஏற்காதவர்களை அவ்வாறு கூறவே இல்லை. மாறாக அன்னாரை சாபத்திற்குரியவர், ஷெய்தான் என்றெல்லாம் பழித்துரைக்கும் தமது எதிரிகளையே நரகவாசிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் கூறிய அசல் வாக்கியம் இவ்வாறே வருகிறதே:
       "இந்த இறைத்தூதர் இறைவனால் நியமிக்கப்பட்டவர், இறைவனது அம்மாமனிதர், இறைவன் புறமிருந்து வந்துள்ளார். இவர் கூறுபவற்றின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். இவரது எதிரி நரகவாசியாவர் என என்னை பற்றி இந்த இறையறிவிப்புகளில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இவ்வனைத்து இறையறிவிப்புகளிலும் இந்த எளியவனைப் பற்றி மிகுதியாக புகழப்பட்டுள்ளது. இந்த புகழாரங்கள் உண்மையில் இறைவன் புறமிருந்துள்ளவை என்பதால் ஒவ்வொரு முஸ்லிமும் எல்லாவித கர்வம், பகட்டு, அகங்காரம் போன்றவற்றிலிருந்து விலகி, கட்டுப்பட்டு நடக்கும் பொறுப்பை தங்களின் தோள்களில் ஏந்திக் கொள்ள வேண்டும். இத்தகையவரை எதிர்ப்பது இறைவனின் சாபத்தை பெறுவதாகும். இத்தகையவரை நேசிப்பது இறைவனின் அன்பைப் பெருவதாகும்." (ரூஹானி கஜாயீன், பாகம் 11, பக்கம் 62,63) (நூலின் அசல் பக்கத்தையும் கீழே தரப்பட்டுள்ளது)



உண்மை என்னவென்றால் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் தான் வாக்களிக்கப்பட்ட மஹ்தி மசீஹ் ஆவார்கள். அவர்களை இறைவன் முந்தைய வேத நூல்களின் முன்னறிவிப்பு மற்றும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகளுக்கேற்ப தோற்றுவித்தான். இதன் அடிப்படையில் அன்னாரை மறுப்பது இறைவனுக்கு கட்டுபடாமையும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றை நிராகரிப்பதுமேயாகும். இங்கு கேள்வி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களைப் பற்றியதல்ல. மாறாக அன்னாருக்கு இறைவனிடமிருந்து கிடைத்த மசீஹ் மற்றும் மஹ்தி என்ற பதவிக்கு கட்டுப்பட்டு நடப்பதை பற்றியதாகும். அவர் மீது நம்பிக்கை கொண்டு அவரிடம் பைஅத் (உடன்படிக்கை) செய்ய வேண்டும் என்ற ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைப் பற்றியதாகும். காலத்தின் தூதரை நிராகரிப்பது தொடர்பாக இறைவன் திருக்குர்ஆனில் மிக விரிவாக விளக்கியுள்ளான். இதை பற்றி இங்கு அதிகம் கூற வேண்டிய அவசியமும் இல்லை.

No comments

Powered by Blogger.