தன்னை ஏற்காதவர் ولد الحرام (அதாவது நெறி தவறி பிறந்தவர்) என்று ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) கூறினார்களா...?உண்மை பின்னணி என்ன?
சிலர் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் ஸ்தாபகராகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் மீது இவ்வாறும் ஆட்சேபனை செய்கின்றனர் அதாவது "எனது வெற்றியை ஏற்காதவர்கள் ஹராத்தில் பிறந்தவர்கள்" என்று ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் மீது எந்தவித சிந்தனையுமின்றி எதையும் அறிந்து ஆராயாமல் அவதூறு கூறுகின்றனர்.
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் அன்வாருல் இஸ்லாம் என்ற நூலில் கூறியதை முன்னும் பின்னும் வெட்டி அநியாயமாக குற்றச் சாட்டுகிறார்கள் இவர்கள்.
திருக்குர்ஆனின் வசனங்களை வெட்டி தப்பான முறையில் விளக்கம் தரும் இஸ்லாத்தின் எதிரிகள் கையாண்ட நிலைமையை தான் இந்த எதிரிகள் கையாண்டு இருக்கின்றனர். அதாவது லா தக்ரபுஸ் சலாத்த (நீங்கள் தொழுகையின் பக்கம் அணுகாதீர்கள்) ஃபவைலுல்லில் முஸல்லீன் (தொழுபவர்களுக்கு நாசம்) என்ற வசனங்களை இணைத்து நீங்கள் தௌழுகையை அணுகாதீர்கள் ஏனென்றால் தொழுகிறவர்களுக்கு நாசம் என்று திருக்குர்ஆன் கூறுகிறதே என இஸ்லாத்த்தின் எதிரிகள் கூறுவதை போன்றே இந்த எதிரிகளும் இங்கு ஆட்சேபனை செய்து வருகின்றனர்.
1893 மே 22 முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை அம்ரித்சரில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கும் அப்துல்லாஹ் ஆத்தம் என்ற கிறிஸ்துவ பாதிரிக்கும் இடையில் இயேசுவின் தெய்வத்துவம் எனும் தலைப்பில் ஒரு விவாதம் நடைபெற்றது. அப்போது இஸ்லாத்தின் மகத்துவமிக்க போதனைகளை நிரூபித்து ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் வாதாடினார்கள். இஸ்லாத்தையும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் பாதிரி அப்துல்லாஹ் ஆத்தம் கடுமையாக விமர்சித்து வாதாடினார். ஒருமுறை பாதிரி அப்துல்லாஹ் ஆத்தம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி தஜ்ஜால் என்று கூறினார். அப்போது ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் அப்துல்லாஹ் ஆத்தம் தௌபா செய்து பாவமன்னிப்பு கோராமலிருந்தால் 15 மாதங்களுக்குள் நாசமடைவார் என்று கூறினார்கள்.
இதற்கிடையில் பாதிரி அப்துல்லாஹ் ஆத்தம் பாவமன்னிப்பும் தவ்பாவும் செய்து கொண்டிருந்தார். இதன் காரணமாக அவர் 15 மாதங்களுக்குள் மரணிக்கவில்லை. இது தங்களுக்கு கிடைத்த வெற்றியும் இஸ்லாத்திற்கு கிடைத்த தோல்வியுமாகும் என்று கிறிஸ்துவர்கள் கோஷமிட்டு இஸ்லாத்தையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் கேவலாமாக பேசி ஊர்வலம் நடத்தினார்கள். அப்போது ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்கள் அப்துல்லாஹ் ஆத்தம் மன்னிப்பு கோரியதனால் தான் நாசத்திலிருந்து தப்பினார் என்றும், தான் தவ்பா செய்யவோ மன்னிப்பு கோரவோ இல்லை என்று வெளிப்படையாக சத்தியம் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு சத்தியம் செய்தால் நான் அன்னாருக்கு 4000/- ரூபாய் சன்மானமாக கொடுப்பதாகவும் அறிக்கை விடுத்தார்கள். இதனை ஏற்க மறுத்த பாதிரி அப்துல்லாஹ் ஆத்தம் சில மாதங்களுக்குள் மிகவும் கேவலமாக மரணித்துவிட்டார். இவ்வாறு ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் தமது அஞ்சாமே ஆத்தம் (ஆத்தமின் முடிவு) என்ற நூலின் விளக்கமான முறையில் இஸ்லாத்திற்கு கிடைத்த வெற்றியைப் பற்றி எடுத்துரைத்தார்கள்.
இதனை பற்றி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் தமது அன்வாருல் இஸ்லாம் எனும் நூலில் இவ்வாறு எழுதுகிறார்கள்:
"எவரொருவர் விளக்கமான இந்த தீர்ப்புக்கெதிராக வெறுப்பும் வைராக்கியமும் கொண்டு ஏசவும், வேண்டுமென்றே பொய் கூறவும் செய்து கிறிஸ்துவர்களுக்கு வெற்றி கிடைத்தது என்று அடிக்கடி கூறுகிறாரோ சிறிதளவு கூட வெட்கமில்லாமல் நீதியுடனும் நியாயத்துடனும் எங்களுடைய தீர்ப்புக்கு பதில் கூறாமல் ஏசுவதிலிருந்து விலகாமலும் எங்களுடைய வெற்றியயை ஏற்காமலும் இருக்கிறாரோ (அவருடைய கூற்றின் படி) அவருக்கு வலதுல் ஹராம் (நெறி தவறி பிறந்தவர்) ஆவதில் திருப்தி இருக்கின்றது போலும். நேரான பாதையை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் அக்கிரமத்தின் அநீதியின் வழியை நேசிப்பதும் வலதுல் ஹராமின் அடையாளமாகும். நிச்சயமாக இஸ்லாத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்பது அல்லாஹ்வுக்கு தெரியும். முஹம்மது நபியின் மார்க்கத்திற்குத்தான் வெற்றி கிடைத்திருக்கிறது. கிறிஸ்துவர்கள்தான் அவமானத்திற்காளானார்கள்." (அன்வாருல் இஸ்லாம் பக் 30,31)
இதுதான் உண்மை! அல்லாமல் தமது வெற்றியை ஏற்காதவர்கள் அனைவரும் வலதுல் ஹராம் (நெறி தவறி பிறந்தவர்கள்) என்று ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் ஒரு போதும் எங்கும் கூறவில்லை. இஸ்லாத்தின் எதிரிகளுக்கு கூட இந்த வார்த்தையை, திருக்குர்ஆனின் சொல்வழக்கத்தின்படிதான் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். இப்படிப்பட்டவர்களை திருக்குர்ஆனும் நெறி தவறி பிறந்தவன் (68:14) என்றே குறிப்பிடுகிறது. கிறிஸ்துவர்களுக்கு வெற்றியும் இஸ்லாத்திற்கு தோல்வியும் கிடைப்பது இந்த மக்களுக்கு (ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களை எதிர்ப்பவர்களுக்கு) ஒரு பொருட்டே அல்ல. அப்துல்லாஹ் ஆத்தம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தஜ்ஜால் என்று கூறியதிலும் இந்த எதிரிகளுக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை போலும். இன்னாலில்லாஹ்....!
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களுக்கு எதிராக பாமர முஸ்லிம்களை தூண்டிவிட வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம்தான் இந்த எதிரிகளுடையது. ஆனால் உண்மைக்கு எப்போதும் வெற்றிதான் கிடைக்கும். பொய்யிற்கும் பொய்யர்களுக்கும் எப்போதும் தோல்விதான் என்பது திருக்குர்ஆனின் போதனையாகும். இந்த பொய்யர்கள் நிச்சயமாக தோல்வியடைவார்கள். இவர்கள் இறைவன் புறமிருந்து அவமானத்திற்காளாகப் போகிறார்கள், ஆகியும் கொண்டு இருக்கிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
Post a Comment