எனது வஹிக்கு தோதுவான ஹதீஸ்களை எடுத்துக் கொள்வோம், மற்றவைகளை குப்பைகளைப் போன்று எறிந்து விடுவோம்.” என்று ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) கூறினார்களா?



இது பல்வேறு ஆட்சேபனைகளைப் போன்று ஹஸ்ரத் அஹ்மத் காதியானி (அலை) அவர்களால் எழுதப்பட்டவற்றின் சொல் மற்றும் பொருளை திரித்து கூறப்படுகின்ற ஆட்சேபனையாகும். நபிமொழியின் அடிப்படையில் வரவிருக்கும் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்களுக்கு ஹகம் (நீதித் தீர்ப்பு வழங்குபவர்) என பெயரிடப்பட்டுள்ளது. அவர் முரண்பாடுகளுக்கு தீர்ப்பு வழங்குவார். மேலும் திருக்குர்ஆன் மூலமாகவும் அவ்வப்போது தமக்கு கிடைக்கும் வஹியின் மூலமாகவும் சரியானது, தவறானது பற்றி தீர்ப்பு வழங்குவார். முழு வாக்கியத்தையும் படித்தால் இந்த எதிரிகளின் சூழ்ச்சி வெளிச்சமாகிவிடும். அசல் வாக்கியத்தை கீழே தருகிறோம்:

       சில தந்திரக்கார மவ்லவிகள், ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வந்து நீங்கள் ஏற்கின்ற இன்ன இன்ன நபிமொழிகள் சரியானவையல்ல என்று கூறினால் அதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்; அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்துவிடுவோம் எனக் கூறுகின்றனர். இதற்கான பதில் ஆம்! மவ்லவிகளே! உங்களிடம் இதுதான் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் வரவிருக்கும் மசீஹ் பற்றி ஸஹீஹ் புகாரியில் ஹகம் (நியாயத்தீர்ப்பு வழங்குபவர்) என்று வந்துள்ளதே, இதற்கு என்ன பொருள் கொடுக்க போகிறீர்கள் என்பதே எங்களது பணிவான கேள்வி.
ஹகம் என்பதன் பொருள் முரண்பாடு மேலோங்குபோது அதற்கான தீர்ப்பு வழங்குபவராக அவரை ஏற்று, அவர் ஆயிரம் நபிமொழிகளைக் கூட பலவீனமானதாக அறிவித்தாலும் அவரது தீர்ப்பை மறுப்பேச்சின்றி ஏற்பது என்று தான் நாங்கள் இதுவரை புரிந்து வைத்திருக்கின்றோம். இறைவன் புறமிருந்து வரக்கூடியவர் உங்களிடம் அறை வாங்க வருவதில்லை, இறைவனே அவருக்கான வழிகளை திறந்துவிடுவான். எவருக்கு இறைவன் கஷ்ஃப் மற்றும் இல்ஹாம்களை வழங்கி வெளிப்படுத்தி, திருக்குர்ஆன் அடிப்படையில் ஒரு வழியையும் காண்பித்திருக்கின்றானோ, அவர் சில சந்தேகத்திற்குரிய நபிமொழிகளுக்காக அந்த பிரகாசமான உறுதியான வழியை எவ்வாறு விட்டு விடுவார்?
       எந்த ஒன்றை இறைவன் அவருக்கு வழங்கியுள்ளானோ அதன்படி செய்லாற்ற வேண்டியது அவர்மீது கடமையல்லவா? இறைவனது தூய வஹியோடு நபிமொழியின் ஏதேனும் கருத்து முரண்பட்டால், தனது வஹியை திருக்குர்ஆன் அடிப்படையில் கண்டால், சில நபிமொழிகளை அதற்கு ஆதரவாக கண்டால் திருக்குர்ஆனுக்கு இணக்கமானவையாகவும், தனது வஹிக்கு எதிரானவையாகவும் இல்லாதிருக்கின்ற அந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொண்டு (குர்ஆனுக்கும் சஹீஹான ஹதீஸ்களுக்கும் தமது வஹிக்கும் முரண்பட்ட) பிற ஹதீஸ்களை விட்டுவிடுவது அவர் மீது கடமையல்லவா?.... பின்பு மவ்லவி சனாவுல்லாஹ் கூறுகிறார்: உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட மசீஹீன் முன்னறிவிப்பை பற்றிய எண்ணம் உள்ளத்தில் எப்படி வந்தது? இறுதியில் அது நபிமொழிகளிலிருந்து எடுக்கப்பட்டவை தானே? அப்படியென்றால் நபிமொழிகளின் மற்ற அடையாளங்களை ஏன் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை? என்று கேட்கிறார். இதற்கு நமது பதில், இந்த பாமரர்கள் ஒன்று இட்டுக்கட்டி அவ்வாறு கூறுகின்றனர். அல்லது மடமையால் அவ்வாறு கூறுகின்றனர். நாம் இதற்கான பதிலாக இறைவன் மீது ஆணையிட்டு கூறுகிறோம். எனது இந்த வாதத்திற்கு ஹதீஸ் அடிப்படையல்ல. மாறாக திருக்குர்ஆனும் என்மீது இறங்கிய வஹியுமாகும். ஆம்! திருக்குர்ஆனுக்கு ஏற்றதும் என்மீது இறங்கிய வஹிக்கு முரண்படாத ஹதீஸ்களையும் சாதகமாக நாம் எடுத்து வைக்கிறோம். மற்ற நபிமொழிகளை நாம் பயனற்றதாக கருதி எறிந்து விடுகிறோம்.” (ரூஹானி கஜாயீன், பாகம் 19, பக்கம் 139)
       பார்த்தீர்களா! அன்னார் குர்ஆன் வஹியின் மீது எவ்வாறு நம்பிக்கை கொண்டிருந்தார்களோ அவ்வாறே தமது வஹியின்மீதும் உறுதியாக நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அன்னார் தமது வஹிக்கு எதிரான நபிமொழியை விட்டுவிடுமாறு கூறியிருப்பது திருக்குர்ஆனின் போதனைக்கு எதிரானதல்ல.  நபிமொழிகளின் முக்கியத்துவத்தைப் பொருத்தவரை ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:
      ஆம் , நேர்வழிக்கான மூன்றாவது வழி நபிமொழியாகும். ஏனெனில் மிகுதியான இஸ்லாமிய வரலாறு, நன்னடத்தை மற்றும் மார்க்க சட்டங்களை நபிமொழிகள் விளக்குகின்றன. மேலும் நபிமொழியின் பெரும்பயன் அது குர்ஆன் மற்றும் சுன்னத்தின் ஊழியனாக இருப்பதுதான். இவ்வாறான சந்தர்ப்பத்தில் குர்ஆனை மதிக்கத் தெரியாதவர்கள் யூதர்கள் தமது ஹதீஸை ஆக்கிக் கொண்டதைப் போல் நபிமொழியை திருக்குர்ஆனின் நீதிபதியாக்குகின்றனர். ஆனால் நாம் நபிமொழியை திருக்குர்ஆன் மற்றும் சுன்னத்தின் ஊழியனாகவே கருதுகிறோம். மேலும் எஜமானுக்கு ஊழியர்கள் இருந்தால்தான் மதிப்பு அதிகரிக்கும் என்பது தெரிந்த விஷயம்தான். குர்ஆன் அல்லாஹ்வின் சொல்லாகும். சுன்னத் அல்லாஹ்வின் தூதருடைய செயலாகும். ஹதீஸ் சுன்னத்திற்கு ஆதரவளிக்கும் சாட்சியாகும். எனவே நபிமொழியை மதிக்கவில்லையென்றால் அது இஸ்லாத்தின் ஒரு உறுப்பை துண்டித்தது போலாகிவிடும். குர்ஆன் மற்றும் சுன்னத்திற்கு முரண்படுகின்ற ஹதீஸ் அது போன்றே திருக்குர்ஆனுக்கு உடன்பாடான ஒரு ஹதீஸுக்கு எதிரான ஒரு ஹதீஸ் ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று. உதாரணமாக ஸஹீஹ் புகாரிக்கு முரண்படுகின்ற ஹதீஸ்கள் ஏற்றுக் கொள்வதற்குரிய தகுதியற்றவையாகும். ஏனென்றால் அதை ஏற்பதால் குர்ஆனையும், குர்ஆனுக்கு உடன்பாடான அனைத்து நபிமொழிகளையும் கைவிட வேண்டியது வரும். மேலும் குர்ஆனுக்கும், சுன்னத்திற்கும், திருக்குர்ஆனுக்கு உடன்பாடான ஹதீஸுக்கும் முரண்படுகின்ற ஒரு ஹதீஸை நியாய உணர்வுள்ள எவரும் ஏற்றுக் கொள்ளத் துனிய மாட்டார் என்பதை நான் அறிவேன். எவ்வாறாயினும் நபிமொழிகளுக்கு மதிப்பளியுங்கள், அவை ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சார்ந்திருப்பதால் அவற்றிலிருந்து பயன் பெறுங்கள். திருக்குர்ஆனும் சுன்னத்தும் ஹதீஸ்களை நிராகரிக்காதவரை நீங்களும் அவற்றை நிராகரிக்காதீர்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களுக்கு நீங்கள் எந்த அளவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்றால், உங்களிடமிருந்து வெளிப்படும் ஒவ்வோர் அசைவு மற்றும் அமைதி, செயல் மற்றும் செயலின்மை அனைத்திற்கும் சாதகமாக உங்களிடம் ஏதாவதொரு ஹதீஸ் இருக்க வேண்டும். (கிஷ்தி நூஹ்- ரூஹானி கஜாயீன், பாகம் 19 பக்கம் 61-63)
அன்னார் மற்றுமோர் இடத்தில் கூறுகின்றார்கள்:
      குர்ஆன் மற்றும் சுன்னத்தை எதிர்க்காத, அவற்றிற்கு இணக்கமான ஒரு நபிமொழி அது எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி அதன்படி செயல்படுவதும் மனிதரால் உருவாக்கப்பட்ட ஃபிக்கா (மார்க்க சட்டம்) மீது அதற்கு முக்கியத்துவம் வழங்குவதும் நமது ஜமாஅத்தின் கடமையாகும். நடுநிலையை உங்கள் மார்க்கமாக கருதுங்கள். அதாவது, திருக்குர்ஆன் கைவிடப்பட்ட ஒன்றாக ஆகிவிடுமளவுக்கு முற்றிலும் ஹதீஸ்களை உங்கள் கிப்லாவாக கஅபாவாகவும் ஆக்கிக் கொள்ளாதீர்கள். நபியின் ஹதீஸ்கள் முற்றிலும் வீணாகிவிடும் அளவுக்கு அந்த ஹதீஸ்களை வீணானவையாகவும் பொருளற்றவையாகவும் ஆக்கி விடாதீர்கள்.” (ரூஹானி கஜாயீன் பாகம் 19 பக்கம் 212,213)

No comments

Powered by Blogger.