ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் தனது வெற்றியை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் வெற்றியை விட பெரியது என்று கூறினார்களா....?

சிலர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் மீது இவ்வாறும் ஆட்சேபனை செய்கின்றனர் அதாவது ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியனி (அலை) அவர்கள் தனது நூலாகிய ரூஹானி கஜாயீன் பாகம் 16 பக்கம் 288 இல் "தமக்கு ஏற்பட்ட வெற்றி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் வெற்றியை விட மிகப்பெரியது" என்று எழுதியுள்ளார் என்று ஆட்சேபனை செய்கின்றார்கள்.
நடுநிலையோடு சிந்திக்கும் மக்களே...! இவ்வாறு ஆட்சேபனை செய்து வரும் இவர்கள் முன்பு பல்வேறு வகையான ஆட்சேபனையை வைத்ததை போன்று இவர்கள் கூறும் இந்த வாக்கியமும் எந்த நூலிலும் கிடையாது. ஆம் இவர்கள் எழுதும் நூலில் வேண்டுமானால் கிடைக்கலாம். அதிலும் கூட அவர்கள் அசல் வாக்கியத்தை தங்களின் விருப்பப்படி திரித்து வளைத்து அதற்கு தவறான பொருள் கற்பித்து முன் வைத்து வருகின்றார்கள். இவர்கள் வைக்கும் இந்த ஆட்சேபனையின் அசல் வாக்கியம் அரபு மொழியில் உள்ளது. அது ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்களுக்கு இறையறிவிப்பாக இறங்கியது. அது இவ்வாறு வருகிறது..


அதாவது "எனவே இவ்விரண்டு நற்செய்திகள் முஃமின்களுக்கானாதாகும். அவை முத்துக்களைப் போல் தெளிவான வேதநூலில் ஒளிர்கின்றன. தெளிவான வெற்றியின் காலம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்தது. மீதமுள்ள (இங்கு கவனிக்கவும், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு கிடைக்கவிருந்த மீதமுள்ள வெற்றி என்று கூற வருகிறார்கள்) இரண்டாவது வெற்றி முந்தைய வெற்றியை விட பெரியதும் பகிரங்கமானதுமாகும். அதற்கான காலம் வாக்களிக்கப்பட்ட மசீஹீன் காலம் என்பது விதிக்கப்பட்டிருந்தது."
இந்த சொற்றொடரில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்கள் எந்த இடத்தில் வாக்களிக்கப்பட்ட மசீஹீன் காலத்தில் கிடைக்கும் வெற்றியை ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வெற்றியோடு போட்டியாக ஒப்பிட்டு குறிப்பிடவே இல்லை. மாறாக வாக்களிக்கப்பட்ட மசீஹீன் காலத்தில் கிடைக்கும் வெற்றியை உண்மையில் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு கிடைக்கும் வெற்றியாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் இறைவனின் ஒரு பொது நியதியை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். அதன் கீழ் ஒவ்வொரு பொருளும் தனது இறுதி எல்லையை எட்டுகிறது. இஸ்லாமும் இந்த இயற்கை நியதிற்கேற்பவே வளர்ச்சியடைந்தது. அது மக்காவில் தோன்றி மதீனா சென்றடைந்து அருகருகே உள்ள பகுதிகளுக்கு பரவி பின்பு சிறிது சிறிதாக உலகின் எல்லைவரை சூழ்ந்து கொண்டது. மேலும் அதன் முழுமையான வெற்றி வாக்களிக்கப்பட்ட மசீஹீன் காலத்தில் தான் கிடைக்க வேண்டியதிருந்தது. இஸ்லாத்தின் இந்த வெற்றிப் பயணத்தை பற்றி மார்க்க அறிஞர்கள் விவரிக்கிறார்கள். ஹஸ்ரத் மௌலானா இஸ்மாயீல் ஷஹீத் (ரலி) (பாலாகோட்) அவர்கள் லி யுழ்ஹிரஹூ அலத்தீனி குல்லிஹி (ஏனைய மார்க்கங்களின் மீது இஸ்லாத்தை மேலோங்குதல்) என்ற (61:10) வசனம் தொடர்பாக கூறுகின்றார்கள்:
"மார்க்கத்தின் துவக்கம் நபி (ஸல்) அவர்கள் மூலமாக ஏற்பட்டது தெரிந்த ஒன்றே என்றாலும் அதன் முழுமை மஹ்தியின் கையில்தான் நிகழும்" (மன்ஸபே இமாமத்-மௌலானா முஹம்மது இஸ்மாயீல் ஷஹீத், பக்கம் 70, ஆயினா அதப் சோக் மினார் அனார்கலி, லாஹூர் 1967)
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்கள் தமக்கு கிடைக்கப்பெற்ற அனைத்து அருள்களும் வெற்றிகளும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் சிறப்பாலே அவர்களின் மூலமாகவே கிடைத்ததாக கூறுகின்றார்கள். அவர்கள் கூறுவதை பாருங்கள்:
"அன்னார்தான் ஒவ்வொரு சிறப்பின் தலையூற்றாவார்கள். எவர் ஒருவர் அன்னாரின் சிறப்பை ஏற்காமல் தனது சிறப்பு பற்றிய வாதம் புரிவாரோ அவர் மனிதரல்ல. ஷெய்தானின் வழி தோன்றல் ஆவார். ஏனெனில் அனைத்து சிறப்புக்களின் திறவுகோல் அன்னாருக்கு வழங்கப்பட்டுள்ளது. (இவற்றை) எவர் அன்னாரின் மூலமாக பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நிரந்தர துர்பாக்கியவான் ஆவார். நாம் ஒன்றுமேயல்ல. நமது உண்மை நிலை என்ன! உண்மையான ஏகத்துவத்தை நாம் இந்த னை மூலமாகத்தான் பெற்றோம். உயிருள்ள இறைவனை நாம் இந்த முழுமையான நபி மூலமாகத்தான் அடையாளம் கண்டு கொண்டோம். அன்னாரின் ஒளியால் தான் (அவனை) அடைந்தோம். இறைவனோடு உரையாடி அவன் முகத்தைக் காணும் பாக்கியமும் இந்த கண்ணியமிக்க நபியின் மூலமாகத்தான் எமக்குக் கிடைக்கப் பெற்றது என்பதை நாம் ஏற்காவிட்டால் நாம் இறையருளை நிராகரிப்பவராகி விடுவோம். இந்த நேர்வழி எனும் சூரியனின் கதிர்கள் வெயிலாக நம்மீது விழுகின்றது. இது நம்மீது விழுந்து கொண்டிருக்கும் வரை, நாம் இதற்கு நேராக (நம்மீது விழும் வகையில்) நிற்கும் வரை நாம் பிரகாசமாக இருப்போம்." (ஹகீகதுல் வஹி-ரூஹானி கஜாயீன், பாகம் 22, பக்கம் 19) 

No comments

Powered by Blogger.