பாக்கிஸ்தானில் அஹ்மதிகளை எதிர்ப்பவர்கள் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டவர்களே...!


ஒவ்வொரு இறைத் தூதரின் மீதும் சொல்லப்படுகின்ற ஆட்சேபனைகள், உண்மையில் அதற்கு முன் தோன்றிய எல்லா இறைத் தூதர்களுக்கும் எதிரான ஆட்சேபனைகளே ஆகும் என்று திருக் குர்ஆன் கூறுகிறது.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது செய்யப்பட ஓர் ஆட்சேபனை பற்றி இறைவன் தனது திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:

"முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திருக் குர்ஆனாகிய இதனை பொய்யாக கற்பனை செய்து கொண்டதேயென்றி வேறில்லை. இதனை கற்பனை செய்து கூறுவதில் அரபி அல்லாத வேறு மக்கள் இவர்களுக்கு உதவி செய்கின்றனர் என்று நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர்." (25:5)

இவ்வாறு அரபி இல்லாதவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உதவி புரிந்து கொண்டிருந்தார்கள் என்று இந்த நிராகரிப்பாளர்கள் குற்றம் சாட்டியதாக திருக் குர்ஆன் இன்னொரு இடத்தில் கூறுகின்றது, அதாவது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் நபித்துவ வாதத்தை அரபி அல்லாதவர்களுடைய உதவியினால்தான் செய்தார்கள் என்று இந்த நிராகரிப்பாளார்கள் கூறுகின்றனர் எனத் திருக் குர்ஆன் கூறுகின்றது.

இது போன்ற ஆட்சேபனைகளைதான் இன்று அஹ்மதிய்யா இயக்கத்தின் மீதும் அதன் எதிரிகள் திரும்பத் திரும்பக் கூறி கொண்டிருக்கின்றனர். சென்ற நபிமார்களின் மீது செய்யப்பட ஆட்சேபனைகளைத்தான், இன்று ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்கள் மீதும் செய்யப்படுகின்றன. 

பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள White Paper எனும் வெள்ளை அறிக்கையில், அஹ்மதிய்யா இயக்கம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்று அதாவது இந்த நபி ஆங்கிலேயர்களால் தோற்றுவிக்கப்பட்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நவீன ஆராய்ச்சியாளர்கள், அஹ்மதிய்யா இயக்கம் ஆங்கிலேய ஆட்சியின் பாதுகாப்பிற்க்காக அமைக்கப்பட்டதாகும் என்று நிரூபிக்க முயல்கின்றனர்.

இந்த "நவீன ஆராய்ச்சியாளர்கள்" யார் என்பது பற்றியும் அவர்கள் செய்த ஆராய்ச்சிகள் என்ன என்பது பற்றியும் அவ்வறிக்கையில் எதுவும் கூறாமல் அஹ்மதிய்யா இயக்கத்தின் மீது வீணான ஒரு பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இவர்கள், இங்கிலாந்திலுள்ள ஓர் அச்சகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள ஓர் நூலை "ஆதாரமாக" காட்டியுள்ளார்கள். இந்நூலில் இந்தியாவில் ஆங்கிலேய அரசாங்கத்தை நிலை நாட்ட வேண்டுமாயின் அங்கு ஒரு பொய் நபியை உருவாக்க வேண்டும் என்று பிரிட்டனியிலுள்ள பாராளுமன்றம் தீர்மானித்ததாக கூறப்பட்டுள்ளது என்று இந்த "நவீன ஆராய்ச்சியாளர்கள்" கூறி உள்ளனர். இவ்வாறு அங்கு ஒரு பொய் நபியை உருவாக்கினால் முஸ்லிம்கள் அனைவரையும் கட்டுப்படுத்த முடியும் என்று பிரிட்டனில் முடிவு செய்தார்களாம்.

இங்கிலாந்தில் இத்தகைய ஒரு நூல் வெளியாகியுள்ளது என்றால் அந்த நூலின் எந்த பக்கத்தில் இந்த செய்தி வந்துள்ளதென்பதை கண்டுபிடித்து தகவல் தருமாறு நான் இங்கிலாந்திலுள்ள நம் இயக்கத் தலைவருக்கு எழுதினேன். இத்தகைய ஒரு நூலே கிடையாது என்று அவர்கள் ஆராய்ந்து பார்த்த பின்னர் தகவல் தந்தார்கள். மேற்குறிப்பிடப்பட்ட நூல் அச்சிட்டதாகக் கூறப்பட்ட அச்சகத்தில் இதுக் குறித்து கேட்டு கொண்டதற்கு அந்த பெயரைக் கொண்ட அச்சகமே கிடையாது என்று தகவல் தந்துள்ளார்கள். பிரிட்டிஷ் மியூசியத்திலும் மற்றும் பல்வேறு நிறுவனத்திலும் இது பற்றி விசாரித்த போது, அப்படி ஒரு நூலோ, அச்சகமோ இருந்ததில்லை என்ற தகவலே கிடைத்தது. 

இப்படிப்பட்ட ஆராய்ச்சியைதான் "இந்த ஆராய்ச்சியாளர்கள்" செய்திருப்பதாக அந்த வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த வெள்ளையறிக்கையில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்கள் அளவுக்கு மீறி ஆங்கிலேயர்களைப் புகழ்ந்திருப்பதாகவும் அவர்களும் அவர்களின் ஜமாத்தும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டதென்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச் சாட்டுகளைப்பற்றிய சில உண்மைகளை மக்கள் முன் வைக்க நான் விரும்புகிறேன். ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்கள் ஆங்கிலே அரசை பாராட்டி கூறியுள்ளார்கள் என்பது உண்மையே ! அதற்குரிய காரணத்தையும் தங்களின் நூல்களில் விரிவாக எடுத்து கூறியுள்ளார்கள். அதாவது அக்காலத்தில் பஞ்சாபில் நடந்த சீக்கிய ஆட்சியில், முஸ்லிம்கள் மிகவும் கொடுமையான இன்னல்களுக்கும் சோதனைகளுக்கும் ஆளாக்கப்பட்டனர். எரிந்து கொண்டிருக்கும் நெருப்புக் குண்டத்தில் முஸ்லிம்கள் விறகுகள் போன்று பயன் படுத்தப்பட்டனர். இத்தகு பயங்கரமான நிலமைகளிலிருந்து முஸ்லிம்களை ஆங்கிலேய ஆட்சிதான் காப்பாற்றியது. அதுமட்டுமல்ல முஸ்லிம்களுக்குரிய உரிமைகளுக்கும் பாதுகாப்பு அளித்தது. இக்காரணங்களிளால்தான் தான் ஆங்கில ஆட்சியை புகழ்ந்துள்ளதாகவும் இவ்வாறு புகழ்ந்து நன்றி தெரிவிப்பது இஸ்லாமிய பண்பாடும் நாகரிகமும் ஆகும் என்றும் அவர்கள் வரைந்துள்ளார்கள்.

சீக்கிய ஆட்சியில் முஸ்லிம்கள் அனுபவித்துக் கொண்டிருந்த பயங்கரமான கொடுமைகளைப் பற்றி ஹிந்து அறிஞர் துளசிராம் என்பவர், 1872 இல் வெளியிட்ட ஷேரே பஞ்சாப் என்னும் தமது நூலில் இவ்வாறு வரைந்துள்ளார்:

"ஆரம்பக்காலத்தில் சீக்கியர்கள் மிகவும் பயங்கரமாகக் கொலையும் கொள்ளையும் செய்து வந்தனர். தங்கள் கைகளுக்குக் கிடைத்த எல்லாவற்றையும் கொள்ளையடித்துத் தமக்கிடையிலேயே பங்கு போட்டு கொண்டிருந்தனர். சீக்கியர்கள் முஸ்லிம்களின் மீது மிகவும் கடுமையான விரோதம் கொண்டிருந்தனர். முஸ்லிம்கள் பாங்கு சொல்வதற்கு அவர்கள் அனுமதிப்பதில்லை. மஸ்ஜிதுகளை ஆக்கிரமித்துக் கொண்டு, அவற்றில் தம்முடைய குருக்கிறந்தம் என்னும் நூலை படித்துக் கொண்டிருந்தனர்."

இந்த நூலில் கூறப்பட்ட நிலையிலிருந்தும் முஸ்லிம்களை ஆங்கிலேயர்கள் காப்பாற்றினார்கள். 13 ஆம் நூற்றாண்டின் முஜத்தித் (சீர்திருத்தவாதி) ஹஸ்ரத் செய்யத் அஹ்மத் பரேல்வி அவர்கள், தமது "ஸவானே அஹ்மதி" என்ற நூலில் சீக்கியர்களின் காலத்தில் முஸ்லிம்களின் நிலையைப் பற்றி பின்வருமாறு வரைந்துள்ளார்கள்:

"நாங்கள் எம்முடைய ஓர் பயணத்தின் போது, பஞ்சாபிலுள்ள கிராமம் ஒன்றிற்கு தண்ணீர் அருந்துவதற்காக சென்றோம். சில பெண்கள் அங்குள்ள ஒரு கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்ததைக் கண்டு, அவர்களிடம் தண்ணீர் கேட்ட போது, அவர்கள் அங்குமிங்கும் பார்வையை செலுத்திவிட்டு, பஷ்து மொழியில் தாங்கள் ஆஃப்கானிஸ்தானிலுள்ள முல்ஸிம் பெண்கள் என்றும், சீக்கியர்கள் தங்களைப் பலாத்காரமாக இங்குப் பிடித்துக் கொண்டு வந்துள்ளனர் என்றும் அழுதுக் கொண்டே கூறினர்."

சீக்கிய கலைகளஞ்சியத்திலும் இது குறித்துக் கூறப்பட்டிருக்கும் செய்திகள் மிகவும் வேதனைக்குரியதாக உள்ளன. முஸ்லிம் பெண்களை அவமானப்படுத்தியது பற்றியும், மஸ்ஜிதுகளை உடைத்துப் பாழாக்கியது பற்றியும், மற்றும் பல மஸ்ஜிதுகளைப் பற்றி அவற்றில் கழுதைகளைக் கட்டியிருந்தது பற்றியும், பாங்கு சொன்னதற்காக மட்டும் அவர்களைக் கொலை செய்தது பற்றியும், இவை போன்ற பல அறியாயச் செயல்கள் பற்றியும் பல்வேறு செய்திகள் அதில் கூறப்பட்டுள்ளன.

இவ்வாறு அக்கால முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. சீக்கியர்களின் அநீதிக்கு இலக்கான முஸ்லிம்களை ஆங்கிலேயர்கள் காப்பாற்றி அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தார்களேன்றால், அதற்கு நன்றி தெரிவித்து அவர்களைப் பாராட்டுவது மனிதத் தன்மையும் இஸ்லாத்தின் போதனைக்கு ஏற்றதுமாகும். இதனை இப்போது இவர்கள் குற்றமாக கூறுகின்றார்கள்.

அன்று பஞ்சாபில் நடந்தது போன்று இன்று பாகிஸ்தானில் அஹ்மதிகள் பாங்கு சொல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்திலும் கூட, பாங்கு ஒலியினால், மனம் புண்படுகின்றது என்று சொல்பவர்கள் உருவாகியிருக்கின்றார்கள். 

இந்தியாவிலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை சீக்கியர் ஒருவருடைய கடிதத்தை அண்மையில் வெளியிட்டிருக்கிறது. அக்கடிதத்தில், முஸ்லிம்கள் பாங்கு சொல்லக்கூடாதென்று தடை விதித்த சீக்கியர்கள் மூடர்கள் என்று முஸ்லிம்கள் அன்று எங்களை பழித்தனர். ஆனால் இன்று முஸ்லிம்களே முஸ்லிம்களுடைய பாங்கை தடை செய்துள்ளனர் என்று குத்திக் காட்டப்பட்டுள்ளது. 

அறியாமை முற்றும் போது இந்த நிலை ஏற்படுவது இயற்கைதான். இமாம் மஹ்தி (அலை) அவர்கள் ஆங்கிலேய ஆட்சியை தாம் பாராட்டியதற்கான காரணத்தை இவ்வாறு தெளிவுப்படுத்தியுள்ளார்கள்:

"நான் ஆங்கிலேய ஆட்சியை மகிழ்விப்பதற்காக எதுவும் கூறவில்லை. எனினும் இந்த ஆட்சி முஸ்லிம்கள், தமது கடமைகளை செய்வதில் எந்த விதமான தடையும் செய்வதில்லை. தமது மார்க்கத்தை இறைவனுக்காக மட்டும் அர்ப்பணம் செய்யும் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த ஆட்சி வாளெடுக்கவில்லை. இவ்வாறான ஆட்சியை எதிர்த்து வாளெடுத்து யுத்தம் செய்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. நான் ஆங்கிலேய ஆட்சியை மகிழ்விக்கவோ நான் படயனடைய வேண்டும் என்ற எண்ணத்துடனோ இவ்வாறு கூறவில்லை. இஸ்லாம் போதிக்கும் உண்மையை எடுத்துரைப்பது எனது கடமை என்பதற்க்காகவே தான் நான் இவ்வாறு கூறுகின்றேன்."

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்கள் ஆங்கிலேயர்களைப் பாராட்டியதால் இவ்வியக்கம் ஆங்கிலேயர்களின் ஏஜெண்டு என்று குற்றம் சாட்டுபவர்களின் நிலை என்ன? இவர்கள் ஆங்கிலேயர்களைப் பற்றி என்ன கூறுகின்றனர்? என்பதைப் பற்றி நாம் பார்ப்போம்.

பாகிஸ்தானின் வெள்ளை அறிக்கையில், அல்லாமா ஸர் முஹம்மது இக்பால் அவர்களின் பெயர் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. இவர் தமது காலத்தில் ஆங்கிலேயர்களையும் அவர்களின் ஆட்சியையும் பற்றி என்ன கூறியுள்ளார் என்பதை பாருங்கள். விக்டோரியா அரசியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அவர் பின்வருமாறு கவிதை எழுதியுள்ளார்:

"அரசியாரின் சடலம் பெருமதிப்புடன் போகிறது. நான் பறந்து சென்று அந்த சடலம் செல்லும் வழியில் என்னை அர்ப்பணம் செய்ய நான் நாடுகிறேன். இவர் மரணமடைந்த இந்த மாதத்திற்கு நான் முஹர்ரம் என்று பெயர் சூட்டுகிறேன். இன்று பெருநாளாக இருக்கிறது. (ஒரு பெருநாளில்தான் மரணமடைந்தார்) ஆனால் இந்தப் பெருநாள் வருவதை விட மரணம் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? இந்திய பூகண்டமே! உனது தலைமீதிருந்து இறைவனுடைய நிழல் மறைந்துவிட்டது. அரசியே உமது மறைவால் இறைவனுடைய அர்ஷே (சிங்காசனம்) நடுக்கம் கொண்டிருக்கிறது."

 

முஜாஹிதே இஸ்லாம் (இஸ்லாத்திற்காக அறப்போர் செய்தவர்) என்று கூறப்படுகின்றவரும் அஹ்மதிய்யா இயக்கம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்று அதன் மீது குற்றம் சாட்டுபவருமான இக்பால் தாம் தமது கவிதையில், பிரிட்டிஷ் ஆட்சியை இறைவனுடைய நிழல் என்று கூறி, விக்டோரியா அரசியார் மரணமடைந்த மாதத்தை இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் ஷஹீதான முஹர்ரம் மாதத்திற்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளார்..

தற்போது அஹ்மதிய்யா இயக்கத்தை எதிர்த்து கொண்டிருக்கும் தேவ்பந்தின் அஹ்லே ஹதீஸ் எனும் பிரிவினரின் தலைவராக திகழ்ந்த மௌலவி நதீர் அஹ்மத் பின்வருமாறு வரைந்துள்ளார்:

"இந்திய மக்கள் மீது ஆட்சி புரிவதற்கு இந்துவோ முஸ்லிமோ அல்லாத வெளிநாட்டு அரசர் ஒருவர்தான் வரவேண்டும். அதில்தான் இந்த மக்களுக்கு நன்மை இருக்கிறது. ஐரோப்பாவிலுள்ள அரசு தான் இங்கே ஆட்சி புரிய வேண்டும். இங்கே ஆங்கிலேய அரசு ஆண்டு கொண்டிருப்பது இறைவனுடைய மாபெரும் கிருபையாகும். இந்த ஆங்கிலேய அரசு தாயை விடவும் அதிகமான அன்பும், இரக்கமும் கொண்டதாகும். பர்மா, நேபாளம், ஆப்கானிஸ்தான், எகிப்து, அரபு நாடுகள் ஆகியவற்றிலுள்ள அரசர்களுள் எவரும் இந்தியாவை இந்தியாவை ஆளுவதற்குரிய தகுதி படைத்தவர் என நான் கருதவில்லை. இந்தியாவை ஆளத் தகுதி பெற்றவர்கள் ஆங்கிலேயர்கள் மட்டும்தான். இந்த ஆட்சி நீண்ட காலம் இருக்க வேண்டுமென்பதுதான் எனது துஆவும் விருப்பமுமாகும்.

அஹ்மதிய்யா ஜமாஅத்தின் கடும் விரோதியான மௌலவி முஹம்மது ஹுஸைன் என்பவர் ஆங்கிலேய அரசை பற்றி கீழ் காணுமாறு எழுதியுள்ளார்:

"முஸ்லிம்களை பொறுத்தவரை பிரிட்டிஷ் அரசு பெருமைக்குரியதாக திகழ்கிறது. குறிப்பாக அஹ்லே ஹதீஸுக்கு இந்த அரசு தற்போதைய எல்லா இஸ்லாமிய அரசை விடவும், ரோம், ஈரான், குரைசான் ஆகியவற்றிலுள்ள அரசை விடவும் அருளுக்குரியதாக உள்ளது. இவ்வரசாங்கத்தின் சமாதான கொள்கைகள் காரணமாக இவ்வரசாங்கம் தங்களுக்கு அருளப்பட்ட ஓர் இறை அருள் என்று அஹ்லே ஹதீஸ் பிரிவினர் கருதுகின்றனர். இந்த அரசாங்கத்தின் கீழ் குடிமக்களாக வாழ்வது இஸ்லாமிய அரசாங்கத்தின் கீழ் குடிமக்களாக வாழ்வதை விடவும் மேலானது என்று எண்ணுகின்றனர்." (இஷாஅதுஸ் சுன்னா, பாகம் 6, எண் 10)

ஆங்கிலேய அரசை மௌலானா ஸஃபர் அலிகான் என்பவர், தமது சமீன்தார் என்னும் பத்திரிகையில், 1911 ஆம் வருடம் நவம்பர் 11 ஆம் நாள் இதழில் கீழ்க்காணுமாறு வரைந்துள்ளார்:

"ஒரு வினாடி நேரத்திற்குக்கூட இந்த அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம்களால் தப்பெண்ணம் கொள்ளவே முடியாது. எவனாவது துர்பாக்கியமான ஒரு முஸ்லிம் இந்த அரசாங்கதிற்கு எதிராக செயலாற்ற நினைத்தால், அவன் ஒரு முஸ்லிமே அல்ல என்று முரசு கொட்டி நாங்கள் அறிவிப்போம். நம்முடைய அரசரின் நெற்றியிலிருந்து வடியும் ஒரு துளி வியர்வைக்குப் பதிலாக முஸ்லிம்கள் தங்களுடைய இரத்தத்தை சிந்த தயாராக இருக்கின்றனர். இந்தியாவிலுள்ள எல்லா முஸ்லிம்களின் நிலையும் இதுவேயாகும்." 

இன்று அஹ்மதியர்களுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டுகின்ற ஜமாத்துக்களின் முன்னோர்களும் தலைவர்களும் ஆங்கிலேய அரசாங்கத்திடம் வைத்திருந்த நம்பிக்கையில் ஒரு சில உதாரணங்களை மட்டுமே நான் கூறியுள்ளேன். இவ்வாறான உதாரணங்கள் இன்னும் பல உள்ளன.

அன்றைய ஆலிம்கள் ஒரு பக்கம் அஹ்மதிய்யா இயக்கம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டதென்று கூறினர். மறு பக்கம், இவ்வியக்கம் ஆங்கிலேய ஆட்சியை ஒழித்து கட்டுவதற்காக அமைக்கப்பட்ட கிளர்ச்சியாளர்களையும் துரோகிகளையும் கொண்டது என அன்றைய அரசுக்கு பொய்யான நயவஞ்சகத்தனமான தகவலை கொடுத்து வந்தனர்.

இது இவ்வாறிருக்க, அஹ்மதிய்யா இயக்கம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்று குற்றம் சாட்டியவர்கள், அவ்வரசிடமிருந்து என்னென்ன நன்கொடைகளும் சலுகைகளும் பெற்றார்கள் என்ற விவரம் நம்மிடமிருக்கிறது.

மௌலவி முஹம்மது ஹுஸைன் படாலவி ஆங்கிலேயர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்ததனால், அவர்களுக்குப் பல ஏக்கர் நிலங்கள் கிடைத்தன. ஆனால் ஆங்கிலேய ஆட்சியிலிருந்து அஹ்மதிய்யா இயக்கமோ அல்லது அதன் ஸ்தாபகரோ அல்லது அவர்களின் குடும்பமோ ஏதாவது நிலமோ அல்லது நன்கொடையோ சலுகையோ பெற்றிருந்ததாக நிரூபிக்க இயலாது. இதன் ஸ்தாபகருக்கு ஏதாவது பட்டமோ பதவியோ ஆங்கிலேய அரசு வழங்கியது கிடையாது. ஆனால் மற்ற முஸ்லிம்களின் ஆலிம்களும் தலைவர்களும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பல பதவிகளும் பட்டங்களும் சொத்துக்களும் பல்வேறு சலுகைகளும் பெற்றிருப்பதை எங்களால் நிரூபித்து காட்ட முடியும். இவர்களில் பலர் ஆங்கிலேய அரசிடமிருந்து சம்பளம், கூட பெற்று வந்தனர்.

உண்மை ஒரு போதும் வெளியாகமால் இருப்பதில்லை. இந்த ஆலிம்களே பின்னர் ஒருவருக்கொருவர் எதிரியாகவும் விரோதியாகவும் மாறி ஒருவரின் மீது ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தனர். இது இறைவன் அவர்களிடம் பழி வாங்கியதை காட்டுகின்றது.

லாகூரிலிருந்து வெளிவரும் "சட்டான்" என்னும் பத்திரிக்கையில் (சுன்னிகளாகிய) பரேல்விகளைப் பற்றி இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

"இவர்கள் ஆங்கிலேயர்களைக் குறித்து "உலில் அம்ரி" (அதாவது மக்கள் எவர்களுக்கு கட்டுப் பட வேண்டுமோ அவர்கள்) என்று கூறினார்கள். இந்த ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும் இந்த நாடு, தாருஸ் சலாம் (அமைதியான நாடு) என்றும் ஃபத்வா (மார்க்க தீர்ப்பு) வழங்கினார்கள். ஆங்கிலேயேர்களால் உருவாக்கப்பட்ட இவர்கள், குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பிறகு ஒரு மார்க்க இயக்கமாக மாறிவிட்டார்கள்." (சட்டான் 15-10-83)

இதற்கு பதிலளித்த தூஃபான் என்னும் பத்திரிக்கை கீழ் வருமாறு எழுதுகின்றது:

"ஆங்கிலேயர்கள் மாபெரும் தந்திரத்துடனும் சாமர்த்தியத்துடனும் அஹ்லே ஹதீஸ் என்னும் வஹாபி இயக்கத்தை இந்தியாவிலும் உருவாக்கித் தமது கைகளாலேயே அதற்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டி, அதனை வளர்ச்சியடைய செய்தார்கள்." (தூஃபான் 7-11-83)

இவ்விரண்டு ஜமாத்துக்களில் ஒவ்வொன்றும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டதென்று பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக்கொள்வதை பாருங்கள். நம்மீது குற்றஞ்சாட்டியது போலவே இவ்விரு ஜமாத்துக்களும் தங்களுக்குள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால் இந்த குற்றச் சாட்டுகளை ஒரு தெளிவான சான்றாக நாம் கொள்ள முடியாது. எனினும் வரலாறு கூறுவதை நாம் பார்க்க வேண்டும். அதை நாம் மறுக்கக்கூடாது.

அஹ்லே ஹதீஸின் நத்வதுல் உலமா என்ற நிறுவனம், ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டதென்றும் இன்னிருவனத்திற்கு ஆங்கிலேயர்களிடமிருந்து மாதந்தோறும் உதவித் தொகை கிடைத்து கொண்டிருக்கிறது என்றும் அதன் ஆலிம்கள் பிரிட்டிஷ் அரசிடமிருந்து சம்பளம் பெற்று வந்தார்கள் என்றும் கூறுகின்ற வரலாற்று உண்மையை எவராலும் மறுக்க முடியாது. ஆனால் இன்று இவர்கள் தங்களை முஜாஹிதீனே இஸ்லாம் (இஸ்லாத்திற்காக அறப்போர் நிகழ்த்துபவர்கள்) என்று கூறிக் கொண்டு ஆங்கிலேயர்களுடைய விரோதிகள் என்ற வேஷம் பூண்டிருக்கிறார்கள். நத்வதுல் உலமாவின் அஸ்திவாரமே ஆங்கிலேயர்களால்தாம் நாட்டப்பட்டது. இந்த நிறுவனத்திலிருந்து வெளியாகும் "அன்நத்வா" என்ற பத்திரிகையின் 1908 டிசம்பர் மாத வெளியீட்டின் 6 ஆம் பக்கத்தில் இவ்வாறு காணப்படுகிறது.

"1908 நவம்பர் 28 ஆம் நாள் தாருல் உலூம் நத்வதுல் உலமாவின் அடிக்கல்லை H.H லேஃப்டினேண்ட் கவர்னர் பஹதூர் ஸர் ஜான்ஸ்கோட் K.c.s.i.e. அவர்கள் நாட்டினார்கள். மஸ்ஜிதே நபவியின் (மதீனாவிலுள்ள முதல் மஸ்ஜித்) மிம்பரை ஒரு கிறித்தவர்தாம் உருவாக்கினார் என்று ஆலிம்கள் கூறுவர். இந்த புகழ்பெற்ற மார்க்க கல்விக் கூடம் ஒரு ஆங்கிலேயரின் மாபெரும் உபகாரத்தாலும் நன்கொடையாலும் எழுந்ததாகும்.' (அன்நத்வா பக்கம் 6, டிசம்பர் 1908).

நத்வதுல் உலமா என்பது, அஹ்லே ஹதீஸ் என்னும் ஒரு முல்ஸிம் பிரிவினரின் புகழ்பெற்ற ஒரு அரபி பள்ளிக்கூடமாகும். இங்கிருந்து ஆலிம்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். இன்று பாகிஸ்தானில் நத்வதுல் உலமா என்னும் அரபி பள்ளிக்கூடத்திலிருந்து படித்து பட்டம் பெற்ற ஆலிம்கள் தாம், பாக்கிஸ்தானில் அரசாங்கத்துடன் இணைந்து அஹ்மதிகளுக்கு எதிராக குழப்பங்கள் விளைவித்து கொண்டிருக்கின்றனர்.

நத்வதுல் உலமாவின் நோக்கம் என்னவென்பதை பற்றி அவர்களின் பத்திரிகை இவ்வாறு கூறுகின்றது:

"நத்வா, அரசியலிருந்து முழுமையாக விலகி நிற்கும் ஒரு நிறுவனமாகும். ஆனால் இதன் நோக்கம், நவீன முறையில் ஆலிம்களை உருவாக்குவதாகும். இத்தகைய ஆலிம்களின் முக்கிய கடமை ஆங்கிலேய ஆட்சியின் அருட்கொடைகளை நன்கறிந்து இந்த அரசின் மீது நம்பிக்கையை வளர்ப்பதற்குப் பாடுபடுவதாகும்." (அன்-நத்வா, பாகம் 5, ஜூலை 1908)

இதற்குத்தான் Cat out of the bag என்று கூறுவது. இங்கு நத்வதுல் உலமா உருவாக்கப்பட்டதன் நோக்கம் தெளிவான முறையில் கூறப்பட்டுள்ளது. இவர்கள்தாம் இன்று அஹ்மதிய்யா இயக்கத்தின் மீது குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அஹ்லே ஹதீஸ் என்னும் வஹாபிகள், ஆங்கிலேய அரசிற்கு நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்து வந்ததை வரலாறு எடுத்துரைக்கிறது. இதே இயக்கம்தான் இன்று முழு பாகிஸ்தானையும் கைவசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறது. இன்று இவ்வியக்கம் வல்லரசுகளின் தூண்டுதல்களினால், ஒரு சதிதிட்டத்தின் அடிப்படையில் பாக்கிஸ்தான் ராணுவத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. இவர்களின் சதிதிட்டத்தைப் பாக்கிஸ்தானிலுள்ள பாமர மக்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. அன்று ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட இவ்வியக்கம் இன்றும் அவர்களுடைய சொற்படியே செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

உண்மையில் இன்று ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம் இருக்கிறது என்று சொன்னால் அது தேவ்பந்திகளென்று கூறப்படும் அஹ்லே ஹதீஸ் என்னும் நத்வதுல் உலமாவேயாகும். ஆனால் இவர்களை மார்க்க சம்பந்தாமான காரியங்களுக்காக ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டவர்களென்று நான் கூறமாட்டேன். எனினும் ஆங்கிலேயர்கள் இவர்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கொண்டிருந்தனர். இன்னும் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர்.... 

(ஹஸ்ரத் நான்காவது கலீஃபதுல் மசீஹ் (ரஹ்) அவர்கள் 1985 ஆம் ஆண்டு இலண்டன் மாநாட்டில் ஆற்றிய உரையிலிருந்து எடுக்கப்பட்டது)

No comments

Powered by Blogger.