முஹம்மதி பேகம் சம்பந்தமாக ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அறிவித்த முன்னறிவிப்பு நிறைவேறியதா....?
இஸ்லாம் மீண்டும் ஒளிவீசிப் பிரகாசிக்க வேண்டும். முஸ்லிம்கள் முன்பு பெற்றிருந்த பெருமைகளையும் மகத்துவங்களையும் மீண்டும் பெற வேண்டும். அழிவைநோக்கி
சென்றுகொண்டிருக்கும் மனித சமுதாயம் இறைவன் பால் திரும்ப வேண்டும். என்பன போன்ற உயரிய நோக்கங்களை உலகில் நிலை நாட்ட இறைவன் புறமிருந்து இக்காலத்தின் இறைத்தூதராக
இமாம் மஹ்தியாக ஹஸ்ரத் மிர்ஸா
குலாம் அஹ்மத்
(அலை) அவர்கள் தோன்றினார்கள். இத்தகைய உயர்ந்த இலட்சியங்களுக்காக இவர்களால் உருவாக்கப்பட்ட அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத், இன்று உலகின் எல்லைகள் வரை கிளை பரப்பி தனது (இல்ஸாம் ஒன்றே இரட்சிப்பிற்கான
ஒரே வழி என்ற) இலக்கை நோக்கி முன்னேறிக்
கொண்டிருக்கிறது.
எனினும் நல்ல திட்டங்கள்
செயல்படுத்தப்படுகின்றபோது அவற்றால் பாதிக்கப்படும் தீய சக்திகள் அவற்றை எதிர்க்கும் என்பது ஒரு நியதியேயாகும். இதற்க்கேற்ப முஸ்லிம் சமுதாயத்தில், ஏன், முழு மனித சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை-மறுமலர்ச்சியை ஏற்படுத்தத்
தோன்றிய இமாம் மஹ்தி (அலை) அவர்களும்
தீய சக்திகளின்
பலமான எதிர்ப்பிற்கு இலக்கானார்கள். உண்மையே நிலைக்கும், பொய் அழிந்தே தீரும் என்ற இறைவாக்கில் நம்பிக்கையற்ற ஷைத்தானிய உடன்பிறப்புகள், இமாம் மஹ்தி தோன்றிய நாள்முதல் அவர்களுக்கெதிராக அவதூறு களையும் போய்க் குற்றச்சாட்டுகளையும் கூறியே வந்துள்ளன.
இறை தூதர்களை எதிர்க்கின்றவர்கள் எப்போதுமே
மூன்று வழிகளைக் கையாளுகின்றனர்.
சிலர் அவர்களை
மார்க்கத்திற்குப் புறம்பானவர்கள் எனப் பறை சாற்றுகின்றனர். இன்னும் சிலரோ அரசியல் ரீதியிலான அல்லது
சமூக ரீதியிலான குற்றச்சாட்டுகளை
அவர்கள் மீது
சுமத்துகின்றனர். இவர்களில் கடைசி நிலையில் உள்ளவர்கள்,
தூய்மையில் உருவான அந்த இறைத்தூதர்கள் மீது ஒழுக்கம் தொடர்பான குற்றச்
சாட்டுகளை சுமத்துகின்றனர்.
'நான் உங்களோடு வாழ்ந்த ஒருவனல்லவா? அதாவது என்னைப் பற்றி உங்களுக்கு
நன்றாகத் தெரியும். எனது நன்னடத்தைக்கு நீங்களே
சாட்சி என்று தமது அப்பழுக்கற்ற
வாழ்க்கையையே
சவாலாக விடுத்த ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கூட இத்தகைய ஒழுக்கம் தொடர்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இன்றும் கூட கிருஸ்தவர்களாலும், யூதர்களாலும், சல்மான் ருஷ்டி போன்ற நயவஞ்சகர்களாலும் இத்தகைய அவதூறுகள் கூறப்பட்டு வருகின்றன.
எனவே இக்காலத்தின் இறைத்தூதராகவும்
இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக இமாம்
மஹ்தியாகவும்
தோன்றிய ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் மீதும் இத்தகைய அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் கூறப்படுவது நூதனமான ஒன்றல்ல
அஹ்மதியா ஜமாத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்ற
அவதூறுகளில் ஒன்று, ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள், முகம்மதி பேகம் என்ற பெண்ணை விரும்பி, அவர்களுடைய பெற்றோர்களிடத்தில் அவளைத் தமக்கு மணமுடித்து தரவேண்டும் என்று கேட்டதாகவும் அவ்வாறு அவர்கள்
செய்யாவிட்டால் இறைவனின் தண்டனை அவர்களுக்கு கிடைக்குமென அறிவித்ததாகவும் ஆனால் அவ்வாறு எதுவும் நிகழவில்லை என்பதாகும். இவ்விசயத்தை அது எந்த அளவுக்கு உண்மை
என்பதை இவர்கள் ஆராயாது தமது கீழ்த்தரமான எண்ணங்களுக்கு ஏற்ப
கொச்சைப்படுத்தி கூறி வருகின்றனர்.
இங்கு ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள
வேண்டும். அனைத்துலகுக்கும் அருளாகத்
தோன்றிய ஹஸ்ரத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்களை இறைவனது கட்டளைக்கேற்ப செய்தார்கள். ஆனால் அந்த மாநபியை எதிர்த்தவர்கள் இதனைக் கொச்சைப்படுத்தி தம் மனம் போன போக்கில்
கீழ்த்தரமாக விமர்சித்தனர். இன்று
கூட அவ்வாறு
விர்மர்சிப்பவர்கள் உண்டு. இவ்வாறே ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் வாழ்க்கையை விமர்சிப்பவர்களும் தரங்கெட்ட முறையில் தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர்.
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு முகம்மதி பேகம் சம்பந்தமாக வந்த முன்னறிவிப்பில்
மூன்று குறிக்கோள் இருக்கின்றன;
ஒன்று,
ஒரு சமுதாயத்தை முதலில் அல்லாஹ் தனது இறை தூதர் மூலமாக இவ்வாறு நடந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் அல்லாஹ்வின் பிடியில் வந்து விடுவீர்கள் என்று எச்சரிக்கை விடுக்க
சொல்கிறான்..அவ்வாறு நடக்காதவர்கள் மீது இறைவனின் கோபம் இறங்குகிறது, இதனை அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்,
وَاِذَآ اَرَدْنَآ اَنْ نُّہْلِکَ قَرْیَۃً
اَمَرْنَا مُتْرَفِیْہَا فَفَسَقُوْا فِیْہَا فَحَـــقَّ عَلَیْہَا الْقَوْلُ
فَدَمَّرْنٰہَا تَدْمِیْرً
“நாம் ஓர் ஊரை (அதன் தீமையின் காரணமாக) அழிக்க நாடினால், அதிலுள்ள (வசதியான) சுகவாசிகளை
(நேர்வழியைப் பின்பற்றி வாழுமாறு) நாம் ஏவுவோம்; ஆனால் அவர்களோ
(நம் ஏவலுக்கு கட்டுப்படாமல்) வரம்பு மீறி நடப்பார்கள். அப்போது, அவ்வூரின் மீது, (வேதனை பற்றிய நம்) வாக்கு உண்மையாகி
விடுகிறது - அப்பால், நாம் அதனை அடியோடு அழித்து விடுகிறோம்.’ (17:17)
இந்த வசனத்தின் அடிப்படையில் இறங்கியதுதான் ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) அவர்களுக்கு
முகம்மதி பேகம் சம்பந்தமான அந்த இல்ஹாம் இறங்கியது, இந்த இல்ஹாம் முகம்மதி பேக்கத்தை ஹஸ்ரத் மிர்சா
குலாம் அஹ்மத் (அலை) அவர்களுடன் மணம் முடித்து வைக்கும் குறிக்கோளுடன் இறங்கியது அல்ல
என்பதை இந்த கட்டுரையை முழுவதையும் படிக்கும் போது அறிந்து கொள்ள முடியும். ஹஸ்ரத்
மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் குடும்பத்தார்கள் இஸ்லாமிய விஷயத்தில் எல்லை
மீறியதின் காரணத்தினால் அல்லாஹ் அவர்களுக்காக அவர்களின் அழிவுக்காக இந்த முன்னறிவிப்பை
செய்தான்.
இந்த முன்னறிவிப்பு இறங்கியதின் இரண்டாவது குறிக்கோள், பொதுவாக ஹிந்து சமுதாயத்தில்
திருமணம் சம்பந்தாமாக தனது இஸ்லாத்தில் அல்லாத கலாச்சாரம் இருந்து வந்தது, தற்போதும் இருக்கின்றது. அதாவது சாச்சா, தாய்மாமா, மற்றும் சின்னம்மா, பெரியம்மா பெண்களுடம் திருமணம் முடிப்பது
ஏற்க முடியாத செயலாகும் என்ற ஒரு கொள்கை அவர்கள் மத்தியில் இருந்தது. இதே சாயல், கொள்கை மிர்ஸா அஹ்மத் பேக் (முஹம்மதி பேகத்தின் தந்தை) மற்றும் அவர்களை சார்ந்த
குடும்பத்திலும் இருந்து வந்தது. அந்த கொள்கை தவறு என்பதை அவர்களிடமும் அவர்களை சார்ந்தவர்களுக்கும்
எடுத்து கூறவே அல்லாஹ் இவ்வாறு ஒரு முன்னறிவிப்பை செய்தான். இதே சூழ்நிலை ஹஸ்ரத் ரசூல்
(ஸல்) அவர்களுடனும் நடந்துள்ளது அதைத்தான் அல்லாஹ் திருமறையில் இவ்வாறு சுட்டி காட்டுகிறான்:
لِکَیْ لَا یَکُوْنَ عَلَی الْمُؤْمِنِیْنَ
حَرَجٌ فِیْٓ اَزْوَاجِ اَدْعِیَاۗىِٕہِمْ اِذَا قَضَوْا مِنْہُنَّ وَطَرًاۭ
وَکَانَ اَمْرُ اللہِ مَفْعُوْلًا
ஆக இந்த வசனத்தின் அடிப்படையில் இறைவன் ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) அவர்களுக்கு இந்த
முன்னறிவிப்பை அருளினான்.
மூன்றாவது குறிக்கோள்: ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) அவர்களின் இந்த
குடும்பத்தார்கள் சீர்திருந்த வேண்டும் என்பதும் இந்த முன்னறிவிப்பின் குறிக்கோளாக
இருந்தது. சில முறை நபிமார்கள் தனது உறவினர்களுடன்
திருமணம் முடித்து கொள்வதனால் அவர்களின் சீர்திருத்தம் ஏற்படும் என்பது இஸ்லாமிய வரலாற்றிலிருந்து
அறிய முடிகிறது. உதாரணதுக்கு உம்மே ஹபீபா பின்து ஆபூசூஃபியான், மற்றும் சௌதா பின்து ஸும்அ (ரலி) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களின் நிக்காஹ்வில் வந்ததால்
அவர்கள் குடும்பம் சீர்திருந்தி இஸ்லாத்தை
தழுவியது. இதன் அடிப்படையிலே ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) அவர்களுக்கும் இந்த முன்னறிவிப்பு
இறங்கியது.
முன்னறிவிப்பின் முக்கியத்துவம்
இந்த முன்னறிவிப்பை அறிவதற்கு முன்பு இதனின் முக்கியத்துவத்தை கூறுவது அவசியம்
ஆகும். ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) கூறுகின்றார்கள்: இறைவன் எனது சாச்சா வகை சகோதரர்கள்
மற்றும் உறவினர்கள்......(அஹ்மத் பேக் போன்றோர்கள்) அவர்கள் நாசம் அடையக்கூடிய எண்ணங்களிலும், செயல்களிலும் அகப்பட்டிருப்பதை கண்டான். மேலும்
பொய்யான கொள்கை, வீணான சடங்கு சம்பிரதாயங்களிலும், பித்அதானா விஷயங்களிலும் அகப்பட்டிருப்பதாக
கண்டான். மேலும் தீய எண்ணங்களை கொண்டவர்களாக இருப்பதையும் கண்டான். மேலும் இறை இருப்பை
மறுக்கக் கூடியவர்களாகவும் இருப்பதாக கண்டான்." (ஆயினே கமாலாதே இஸ்லாம் பக்கம்
566, அச்சிட்ட ஆண்டு 1893)
இதை தொடர்ந்து இவ்வாறும் கூறினார்கள்: "அவர்கள் இறைவன் மற்றும் ரசூல் (ஸல்)
அவர்களை முற்றிலுமாக நிராகரிக்கக்கூடியவர்களாகவும், விதியை நம்பாதவர்களாகவும் மாறாக நாத்திகவாதிகளாகவும்
இருந்தனர்." (ஆயினே கமாலாதே இஸ்லாம் பக்கம் 567)
அவர்கள் (அதாவது அஹ்மத் பேக் மற்றும் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள்) குர்ஆனையும், ரசூல் (ஸல்) அவர்களையும் மிகவும் கீழ்தரமாக
மதித்து வந்தார்கள்...ஆயினே கமாலாதே இஸ்லாம் பக் 568 இல் இதை ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை)
குறிப்பிடுகிறார்கள். இவர்களின் இந்த நிலையை கண்டு ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) அவர்கள்
இவ்வாறு துஆ செய்தார்கள்,"எனது இறைவா! உனது அடியானுக்கு உதவி செய்வாயாக மேலும் உனது எதிரியை
இழிவு படுத்துவாயாக." (ஆயினா கமாலாதே இஸ்லாம் பக்கம் 569) இந்த துஆவிற்கு பதிலாக
இறைவன் இல்ஹாம் மூலமாக அன்னாருக்கு (அலை) இவ்வாறு அறிவித்தான்,
"நாம் அவர்களின் தீய
நடவடிக்கைகளை கண்டோம். ஆகவே பல்வேறு ஆக்கினையை கொண்டு நாம் அவர்களை அழிப்போம். மேலும்
வானத்தின் கீழ் அவர்களை நாம் அழிப்போம். விரைவில் அவர்களுடன் நான் என்ன செய்ய போகிறேன்
என்பதை நீர் பார்ப்பீர். நாம் அனைத்திலும் ஆற்றல் கொண்டவனாக இருக்கிறோம். நாம் அவர்களின்
பெண்களை விதவையாகவும், அவர்களின் பிள்ளைகளை ஏழையாகவும், அவர்களின் வீடுகளை ஒன்றுமில்லாததாகவும் ஆக்குவோம்.
அவர்கள் செய்ததற்கு இதுவே முடிவாகும். ஆனால் அவர்களை ஒரே அடியாக அழித்து விட மாட்டோம்.
மாறாக சிறிது சிறிதாக. ஏனென்றால் அவர்கள் தனது காரியங்களிலிருந்து திரும்பி விட வேண்டும்
என்பதற்காக, பாவமன்னிப்பு செய்பவர்களாக ஆகி விட வேண்டும் என்பதற்காக (நாம்
இவ்வாறு செய்வோம்) அவர்கள் மீதும், அவர்களின் வீட்டின் நான்கு சுவர்கள் மீதும், அவர்களின் பெரியவர்கள் மீதும் சிறியவர்கள்
மீதும், அவர்களின் பெண்கள் மற்றும் ஆண்கள் மீதும் அவர்களின் வீட்டிற்கு
வரும் விருந்தாளிகளின் மீதும் இறைவனின் சாபம் இறங்கவிருக்கிறது. அவர்கள் அனைவரும் சபிக்கப்பட்டவர்களாக
ஆகிவிடுவார்கள்." (ஆயினாயே கமாலாதே இஸ்லாம் பக்கம் 569)
இறைவனின் இந்த முன்னறிவிப்பில் அவர்கள் அழியாமல் இருப்பதற்கு ஒரு நிபந்தனையை குறிப்பிட்டிருப்பதை நீங்கள் காணலாம். அதாவது பாவமன்னிப்பு தேடுவது.
அவர்கள் பாவமன்னிப்பு தேடினார்கள் என்றால் அவர்கள் தப்பித்துக் கொள்வார்கள் என்று இறைவன்
இந்த இல்ஹாமில் கூறுகிறான்.
அவர்களின் பெண்கள் விதவைகளாக, அவர்களின் பிள்ளைகள் ஏழையாக ஆகுவதின் விளக்கத்தை கூறியவாறு ஹஸ்ரத்
மசீஹ் மஊத் (அலை) இவ்வாறு கூறுகிறார்கள், "மிர்ஸா அஹ்மத் பேக் தனது பெண்பிள்ளையின்
(முகம்மதி பேகத்தின்) சம்பந்தத்தை வாக்களிக்கப்பட்ட மசீஹ்வுடன் செய்தால் அவர்களும்
அவர்களின் குடும்பத்தார்களும், எவ்வாறு உம்மே ஹபீபா பின்து ஆபூ சுஃபியான் மற்றும் சௌதா பின்து
சம்ஆ (ரலி) இறைவனின் ரசூல் (ஸல்) அவர்களின் நிக்காஹ்வில் வந்ததின் காரணத்தால் அவர்களின்
குடும்பத்தார்கள் இஸ்லாத்தை தழுவினார்களோ அவ்வாறு ஆன்மீக அருட்களிலிருந்து பங்கு பெருவார்கள்.
முன்னறிவிப்பில் இவ்வாறும் கூறப்பட்டுள்ளது, "அவர் இந்த சம்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாமல்
வேறொருவருக்கு முகம்மதி பேகத்தை திருமணம் செய்து கொடுப்பாரேயானால் அதற்கு பிறகு (திருமணத்திற்கு
பிறகு) அவரது தந்தை மூன்று வருடத்திற்குள் இறந்து விடுவார், யாரோடு முகம்மதி பேகத்தின் திருமணம் நடைபெருமோ
அவர் இரண்டரை வருடத்திற்குள் மரணம் அடைந்துவிடுவார். இவ்வாறு பெண் விதவை ஆண பிறகு என்னை
மணமுடித்துக் கொள்வார். ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) இதனை எனக்கு இறைவன் அறிவித்ததாக ஆயினாயே
கமாலாதே இஸ்லாம் பக்கம் 286) இல் கூறுகின்றார்கள்.
இந்த இறை அறிவிப்பு இதோடு இன்னொரு விஷயத்தையும் இவ்வாறு கூறுகிறது, அதாவது மிர்ஸா அஹ்மத் பேக் தனது மகளை நிச்சயமாக
வேறொருவருக்கு நிச்சயம் செய்து கொடுப்பார். இதற்கான முன்னறிவிப்பு இவ்வாறு வருகிறது:
"எனது அடையாளங்களை அவர்கள் நிராகரித்தார்கள் மேலும் பரிகாசம் செய்தார்கள். இறைவன்
நிச்சயமாக அந்த பெண்ணை உம்பக்கம் திருப்பி கொண்டு வருவான்" (ஆயினாயே கமாலாதே இஸ்லாம்
பக்கம் 286)
இந்த முன்னறிவிப்பில் "யருத்துஹா" (திருப்பி கொண்டு வருவான்)) என்ற சொல்லானது
அந்த பெண்ணுக்கு வேறொரு இடத்தில் திருமணம் செய்யப்படும் என்பதை வெளிப்படுத்துகிறது.
அதே சமயம் அஹ்மத் பேக் மற்றும் அவரின் மருமகன் தௌபா செய்யவில்லை என்றால் அழிவுக்கு
உள்ளாவார்கள் என்பதையும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட முன்னறிவிப்பு
வெளிப்படுத்துகிறது. அந்த முன்னறிவிப்பு "ஆனால் அவர்களை ஒரே அடியாக அழித்து விட
மாட்டோம். மாறாக சிறிது சிறிதாக. ஏனென்றால் அவர்கள் தனது காரியங்களிலிருந்து திரும்பி
விட வேண்டும் என்பதற்காக, பாவமன்னிப்பு செய்பவர்களாக ஆகி விட வேண்டும் என்பதற்காக (நாம்
இவ்வாறு செய்வோம்)"
ஆக இந்த முன்னறிவிப்பில் தவ்பா என்ற ஒரு நிபந்தனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது .அவர்கள்
தவ்பா செய்வார்களேயானால் அவர்கள் அழிவதிலிருந்து இரட்சிப்பு பெருவார்கள், இவ்வாறு இறைவன் கருணையாளனாக காண்பார்கள் என்பதை
முகம்மதி பேகம் சம்பந்தமாக கூறப்பட்ட இந்த முன்னறிவிப்பில் காணப்படுகிறது.
முன்னறிவிப்பில் தவ்பா நிபந்தனையாக இருந்தது என்பதற்கான மூன்றாவது ஆதாரம்: ஹஸ்ரத்
மசீஹ் மஊத் (அலை) அவர்கள் இந்த முன்னறிவிப்பு சம்பந்தாமாக அன்னாருக்கு கிடைத்த ஒரு
வஹியை இவ்வாறு கூறுகிறார்கள்,"நான் ஒரு பெண்ணை (முஹம்மதி பேகத்தின் அம்மாவின்
தாயை ஆன்மீக காட்சி மூலமாக) கண்டேன் மேலும் அழுததின் அடையாளம் அவர்களின் முகத்தில்
தென்பட்டது. நான் அதை கண்டு அவர்களிடம் பெண்ணே தவ்பா செய்வாயாக!, தவ்பா செய்வாயாக! ஏனென்றால் உனது பிள்ளைகள்
மீது அழிவு ஏற்பட உள்ளது, உன்மீது முஸீபத் ஏற்படவுள்ளது. ஒரு ஆண் மரணித்துவிடுவார். அதை
கண்டு நாய்கள் எஞ்சிவிடும். (இஷ்திஹார் 15, ஜூலை 1888 அடிக்குறிப்பு &
தப்லீக்கே ரிசாலத்
பாகம் 1 பக்கம் 120)
இந்த இல்ஹாமில் கூறப்பட்டுள்ள "தூபி" தூபி" என்ற சொல்லானது அவர்களின்
குடும்பத்தில் இறங்கவிருக்கும் அழிவு தவ்பா செய்வதின் மூலமாக நீக்கப்படும் என்பதை வெளிப்படுத்துகிறது.
ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்: "அவர்கள் தவ்பா செய்யவில்லை
என்றால் இறைவன் அவர்களின் குடும்பத்தின் மீது அழிவை இறக்குவான். அவர்கள் அழிந்து விடுவார்கள்.
அவர்களின் வீடு விதவைகளை கொண்டு நிரப்பபடும், அவர்களின் நான்கு சுவர்களின் மீதும் (இறை)
கோபம் வெளிப்படும். ஆனால் அவர்கள் (தவ்பா செய்து) திரும்பிவிட்டால் இறைவன் கருணையுடன்
திரும்புவான்" (இஷ்திஹார் 20, பிப்ரவரி 1886, பின்குறிப்பு ரியாஜ் ஹிந்த் அம்ரித்சர் பத்திரிக்கை மார்ச் 1886, ஆயினாயே கமாலாதே இஸ்லாத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)
ஆகவே இதன் மூலம் வெளிப்படுவது என்னவென்றால் ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) அவர்களின்
முன்னறிவிப்பு "அந்த பெண்ணை நான் திருமணம் முடிப்பேன்" என்பது அசல் முன்னறிவிப்பு
இல்லை மாறாக அஹ்மத் பேக் மற்றும் சுல்தான் முஹம்மத் தவ்பா செய்யவில்லை என்றால் (மேலே
குறிப்புட்டுள்ள) இஷ்திஹார் 20 பிப்ரவரி 1886 ஐ பார்க்கவும்) மூன்று, இரண்டரை வருடத்திற்குள் அழிந்து விடுவார்
அவரின் அழிவிற்கு பிறகு முஹம்மதி பேகம் விதைவையாகி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களை திருமணம்
முடிப்பார். இதனை ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) மிகத் தெளிவாக தனது இஷ்திஹார் 20 பிப்ரவரி
1886 இல் இவ்வாறு கூறி உள்ளார்கள்," இறைவன் இந்த எளியவனுக்காக எதிரியாகிய உறவினர்கள்
சம்பந்தப்பட்ட முன்னறிவிப்பை வெளிப்படுத்தி உள்ளான். அதாவது அஹ்மத் பேக் எனும் பெயரை
கொண்டவர் தனது மூத்த மகளை இந்த எளியவனுக்கு திருமணம் முடித்து வைக்கவில்லை என்றால்
மூன்று வருடத்திற்குள் மாறாக அதைவிட குறைவான நேரத்தில் மரணம் அடைந்து விடுவார். மேலும்
இவளை யார் மணம் முடிப்பாரோ அவர் மணம் முடித்த நாளிலிருந்து இரண்டரை வருடத்திற்குள்
மரணம் அடைந்து விடுவார். அதற்கு பிறகு இறுதியில் என்னை மணம் முடிப்பார்."
ஆக இதன் மூலமும் தெளிவாக தெரியவருவது என்னவென்றால் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) முஹம்மதி
பேகத்தை மணம் முடிப்பது இருவரின் மரணத்தை சார்ந்து இருக்கிறது என்பது தெரியவருகிறது.
இன்னும் தெளிவாக இவ்விஷயம் கீழ்காணும் முன்னறிவிப்பின் மூலமாக அறிய முடிகிறது,
"یموت بعلھا و ابوھا
الیٰ ثلاث سنۃ من یوم النکاح ثم نردھا الیک بعد موتھا"
பொருள்: அவளின் கணவன் மற்றும் தந்தை திருமணம் முடிந்த நாளிலிருந்து மூன்று வருடத்திற்குள்
மரணம் அடைந்து விடுவர். அவர்கள் இருவரின் மரணத்திற்கு பிறகு நாம் அந்த பெண்ணை உம்பக்கம்
கொண்டு வருவோம் (அதாவது உம்முடன் திருமணம் முடித்து வைப்போம்)" (கராமதூஸ் சாதிக்கீன்
இறுதி டாயிட்டில் பேஜ்)
இன்னும் தெளிவாக, இந்த முனறிவிப்பு அசலில் நிக்காஹை சார்ந்த முன்னறிவிப்பு அல்ல
மாறாக அசல் முன்னறிவிப்பு அஹ்மத் பேக் மற்றும் சுல்தான் முஹம்மத் ஆகிய இருவரின் மரணத்தை
குறித்து இருந்தது என்பது கீழ்காணும் ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) அவர்களின் கூற்றின் மூலம்
அறிந்து கொள்ளலாம்.
"இவர்கள் இருவரும் மரணம் அடைவதே எனது முன்னறிவிப்பின் அசல் நோக்கமாக இருந்தது.
அந்த பெண்ணை நான் திருமணம் முடிப்பது என்பது அவர்களின் மரணத்திற்கு பிறகே. அதுவும்
அடையாளத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்துவது மட்டுமே இதனின் நோக்கமே அன்றி வேறில்லை.
(அஞ்சாமே ஆத்ஹம் பக்கம் 216)
ஆக மேற்கண்ட விஷயங்கள் மூலம் மிர்ஸா சுல்தான் முஹம்மத் மற்றும் அஹ்மத் பேக் தவ்பா
செய்யவில்லை என்றால் அழிவிற்குள்ளாவார்கள் அதற்கு பிறகு முகம்மதி பேகம் ஹஸ்ரத் மசீஹ்
மஊத் (அலை) அவர்களை திருமனம் முடித்து கொள்வார்கள் என்பதே அசல் முன்னறிவிப்பாக இருந்தது.
இப்போ கேள்வி என்னவென்றால், அந்த இருவரும் தவ்பா செய்தார்களா, அந்த நிபந்தனை மூலம் அவர்கள் பலன் பெற்றார்களா
என்பதே ஆகும்.
அந்த இருவரில் ஒருவரே பலன் பெறுவார் என்பதை ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) அவர்களுக்கு
காட்டப்பட்ட ஒரு ஆன்மீக காட்சியின் மூலமாக தெளிவாகிறது. அந்த ஆன்மீக காட்சி இதுவாகும்,
"பெண்ணே தவ்பா செய்வாயாக!, தவ்பா செய்வாயாக! ஏனென்றால் உனது பிள்ளையின்
பிள்ளை மீது அழிவு ஏற்பட உள்ளது, உன்மீது முஸீபத் ஏற்படவுள்ளது. ஓர் ஆண் மரணித்துவிடுவார்.
(சுல்தான் முஹம்மத் அல்லது அஹ்மத் பேக் இவர்கள் இருவரில் ஒருவர் தவ்பா செய்யாததின்
காரணமாக மரணம் அடைந்து விடுவார், மற்றொருவர் தவ்பா செய்து பலன் பெற்றுக்கொள்ளுவார்) அதை கண்டு
நாய்களின் குறைதலே எஞ்சிவிடும். (அதாவது ஏன்
மிர்ஸா குலாம் அஹ்மத் உடன் அந்த பெண்ணின் திருமணம் நடக்கவில்லை என்று எந்த காரணமும்
இல்லாமல் ஆட்சேபனை செய்ய தொடங்கிவிடுவார்கள்) (இஷ்திஹார் 10/ ஜூலை-இஷ்திஹார் 15 /ஜூலை
1888 இன் அடிக்குறிப்பு & தப்லீக்கே ரிசாலத் பாகம் 1 பக்கம் 124 அடி குறிப்பு)
ஆக மேற்கூறிய விஷயத்தின் மூலம் ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) அவர்களின் முன்னறிவிப்பு
இதுவாக இருந்தது என்பதை நிரூபித்து விட்டோம் அதாவது
1- அஹ்மத் பேக் தனது மகளை நிச்சயமாக வேறொருவருக்கு திருமணம் முடித்து கொடுப்பார்.
(یردھا الیک)
2- மணம் முடிந்த பிறகு அவர்கள் தவ்பா செய்யவில்லை என்றால் மூன்று வருடத்திற்குள்
அஹ்மத் பேக்கும், அவரது மருமகனும் மரணம் அடைந்து விடுவார்கள். இது நிகழ்ந்த பிறகே
அந்த பெண் விதவை ஆகி ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) அவர்களை திருமணம் முடிப்பார்கள்.
3- தவ்பா என்ற நிபந்தனையின் மூலம் இருவரில் ஒருவர் பலன் பெறுவார் மற்றொருவர் மரணம்
அடைவார். (அரபியில் یموت
என்று வந்துள்ளது.
இது ஒருமையை குறிக்கும்)
4- மற்றொருவர் இந்த நிபந்தனை மூலம் பலன் பெறுவார். தவ்பா செய்து தப்பித்துக் கொள்வார்.
5- முஹம்மதி பேகம் விதவை ஆக மாட்டாள்.
6- இதன் காரணமாக ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுடன் திருமணம் நடக்காது. ஏனென்றால்
திருமணம் அவள் விதவை ஆண பிறகே நடக்க வேண்டியதிருந்தது. (அஞ்சாமே ஆத்ஹம் பக்கம்
216)
7- (சூரா அஃராஃப் வசனம் 176 இன் அடிப்படையில்) எவ்வேளையிலும் தமது நாவை வெளிப்படுத்தக்கூடியவர்கள்
இதன் மீது ஆட்சேபனை செய்து கொண்டே இருப்பார்கள்.
முன்னறிவிப்பு நிறைவேறியது
ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) அவர்களின் முன்னறிவிப்பு வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறியது
1-அஹ்மத் பேக் தனது மகள் முஹம்மதி பேகத்தை 7 ஆம் தேதி ஏப்ரல் மாதம் 1892 இல் மிர்சா
சுல்தான் முஹம்மதுடன் திருமணம் செய்து வைத்தார்.
2- அஹ்மத் பேக் தவ்பா என்ற நிபந்தனை மூலம் பலன் பெறாமல் திருமணம் முடிந்து ஐந்து
மாதம் 24 வது நாள்களுக்கு பிறகு அதாவது 30 செப்டம்பர் 1892 இல் மரணம் அடைந்தார்.
"யமூது" என்பதின் ஒரு பகுதி இவ்வாறு நிறைவேறியது.
3- சுல்தான் முஹம்மத் தவ்பா என்ற நிபந்தனை மூலம் பலம் பெற்றார். இவ்வாறு தவ்பா
செய்து தப்பித்து கொண்டார். ("யமூது" வின் இரண்டாம் பகுதி நிறைவேறியது)
4- சுல்தான் முஹம்மத் தவ்பா செய்து மரணம் அடையாததால் முஹம்மதி பேகம் விதவை ஆகவில்லை.
5- விதவை ஆகாத பட்சத்தில் ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) அவர்களுடன் திருமணம் நடைபெறவில்லை.(முன்னறிவிப்பின்
அடிப்படையில், விதவை ஆண பிறகே திருமணம் ஆகுவதாக இருந்தது) (அஞ்சாமே ஆத்ஹம்
பக்கம் 216)
6- ஆட்சேபனை செய்பவர்கள் இன்று வரை தனது செயல்களிலிருந்து விலகுவதில்லை, தானாகவே "எப்கா மின்ஹு கிலாபுன் முதஅத்திதஹ்"
என்ற முன்னறிவிப்பை முழுமை ஆக்கி கொண்டிருக்கிறார்கள்.
எமது அனைத்து விஷயங்களும் இரண்டே விஷயத்தில் அடங்கி இருக்கின்றன
1- முன்னறிவிப்பில் தவ்பா என்ற நிபந்தனை இருந்தது
2- சுல்தான் முஹம்மத் "தவ்பா" செய்து பலன் பெற்றார்.
ஆக நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு இந்த முன்னறிவிப்பு தவ்பா என்ற நிபந்தனையை
சார்ந்து இருந்தது. இதனை சுல்தான் முஹம்மத் கையாண்டார் இவ்வாறு அவர் தப்பித்து கொண்டதின்
காரணத்தினால் முஹம்மதி பேகம் விதவை ஆகவில்லை. விதவை ஆகாத பட்சத்தில் அவளுடய திருமணம்
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுடன் நடக்கவில்லை. ஆகவே இந்த முன்னறிவிப்பு சரியான முறையில், முழுமையான முறையில் நிறைவேறியது என்பதை அறிவார்.
இப்போது, சுல்தான் முஹம்மத் உண்மையிலேயே தவ்பா செய்தாரா இல்லையா என்பதை
நிரூபிக்க வேண்டிய கடமை எம்மீது உள்ளது..அதை நாம் கீழே காண்போம்.
இவர் தவ்பா செய்தார் என்பதற்கு 5 ஆதாரங்கள் இருக்கின்றன.
1- மனிதனின் இயல்பு..அதாவது இருவரை பற்றி நீங்கள் இந்த நேரத்தில் மரணம் அடைந்து
விடுவீர்கள் என்று கூற அவ்விருவரில் ஒருவர் இன்னொருவரின் கண்களுக்கு முன்பே மரணம் அடைந்து
விடுகிறார் என்றால் மற்றொருவர் உள்ளத்தில் தானாகவே தவ்பா செய்து விட வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டு விடுகிறது. இவ்வாறே சுல்தான் முஹம்மத் விஷயத்திலும் நிகழ்ந்தன.
2- அவரது எழுத்து பதிவு. அவர் தனது கை பட எழுதிய ஒரு கடிதம் அதில் அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார், அந்த கடிதம் தஸ்கிஸுள் அஸ்ஹான் என்னும் எட்டில் மே,1913 இதழில் இடம் பெற்றுள்ளது. அதில் அவர்
கூறி இருப்பதாவது:
"நான் எப்போதுமே மறைந்த மிர்ஸா சாஹிப் அவர்களை நேர்மையான, கண்ணியத்திற்குரிய ஒருவராகவே எண்ணுகிறேன்.
அவர்கள் ஒரு உன்னதமான ஆன்மாவாகவும் எப்போதும் இறைவனை எண்ணத்தில் கொண்டவருமாவார்கள்.
நான் அவர்களைப் பின்பற்றுபவர்களை எதிர்க்கின்றவன் அல்ல. சில காரணங்களால் அவர்களுடைய
வாழ்நாளில் அவர்களை சந்திக்கின்ற நற்பேறு எனக்குக் கிடைக்கவில்லை என்பதற்காக நான் வருந்துகிறேன்".
3- அவர் தான் தவ்பா செய்து விட்டதாக அவரே கூறும் கூற்று:
அவர் மேலும் கூறியிருப்பதாவது.
"எனது மாமனார் ஜனாப் மிர்சா அஹ்மத் பேக் சாஹிப் அந்த முன்னறிவிப்பின் அடைப்படையில்
இறந்துவிட்டார்கள். ஆனால் இறைவன் பாவங்களை மன்னிப்பவனும், கருணையாளனாகவும் இருக்கிறான். தனது மற்ற அடியோனின்
வார்த்தைகளையும் கேட்க கூடியவனாக இருக்கிறான், கருணை காட்ட கூடியவனாகவும் இருக்கிறான்.....நான்
ஈமானுடன் கூறுகிறேன் இந்த திருமண சம்பந்தபட்ட முன்னறிவிப்பு எந்தவித சந்தேகத்தையும்
எனக்கு ஏற்படுத்தவில்லை. பைஅத் விஷயம் ஒன்று மட்டும் பாக்கி இருக்கிறது. ஸோ, நான் ஆணையிட்டு கூறுகிறேன், நான் மிர்ஸா சாகிபின் மீது ஈமான் மற்றும்
கொள்கை கொண்டுள்ளேன். பைஅத் செய்த உங்களுக்கு கூட இந்த அளவுக்கு இருக்காது என நான்
நம்புகிறேன்......எனது மன விஷயம் ஒன்று பாக்கி இருக்கிறது, இதை பற்றி சொல்வதாக இருந்தால் "அந்த
முன்னறிவிப்பின் பொது ஹிந்து ஆரியர்களும், கிருஸ்தவர்களும், லேக்ராம், ஆத்தம் ஆகியோரும் மிர்ஸா சாஹிப் மீது வழக்கு
தொடர்ந்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக என்னிடம் சொன்னார்கள். நான் அந்தப் பணத்தைப்
பெற்றிருந்தால் பெரும் செல்வந்தனாகி இருப்பேன். ஆனால் அவர்கள் (ஹஸ்ரத் அஹ்மத் (அலை)
) மீது நான் கொண்டிருந்த உயர்வான நம்பிக்கையே என்னை அவ்வாறு செய்ய விடாது தடுத்தது."
(அல் - பஸல் 9 ஜூன் 1921)
4- சுல்தான் முகம்மதின் மகன் முஹம்மத் இஸ்ஹாக் பேக் சாஹிப் இவ்வாறு எழுத்து மூலமாக
அவர் தந்தை தவ்பா செய்ததை இவ்வாறு கூறுகிறார்,"என்னுடைய பாட்டனார் மிர்ஸா முஹம்மது பேக், முன்னறிவிப்பின் படியே இறந்து போனார். இதற்குப்
பின் எஞ்சிய குடும்பத்தினர் அஞ்சி தங்களைத் திருத்திக் கொண்டார்கள். அவர்களில் அநேகம்
பேர் அஹ்மதியத்தில் தன்னை இணைத்து கொண்டார்கள், இது ஒரு மறுக்கயியலாத சான்றாகும். நான் மீண்டும்
மிக உரத்த குரலில் தெரிவித்து கொள்வது என்னவென்றால், ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) அவர்களின் இந்த முன்னறிவிப்பும்
நிறைவேறியது. (அல்-பஸல்26,பிப்ரவரி 1923 பக்கம் 9)
5- சுல்தான் முஹம்மத் தவ்பா செய்யவில்லை ஆகவே அவர் மரணம் அடையவும் இல்லை என்று
ஆட்சேபனை செய்பவர்களுக்கு ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) அவர்களின் சவால்.
ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) கூறினார்கள்,"முடிவு எளிதே. நீங்கள் அவசரப்படுகிறீர்கள்
என்றால் அஹ்மத் பேக்கின் மருமகன் சுல்தான் முகம்மதுவிடம்,
"இவர் பொய்யர் என்று
அறிவிப்பு செய்தவாறு பிரசுரம் தாரும்" என்று கேளுங்கள். அதற்கு பிறகு (அவர் அவ்வாறு
ஒரு பிரசுரம் தந்த பிறகு) அல்லாஹ் தாலா நியமிக்கும் தருணத்தில் அவருக்கு மரணம் வந்தடையவில்லை
என்று சொன்னால் நான் பொய்யனாவேன்....அவர் தனது கூற்றை வெளிப்படையாக சொல்லும் வரை இந்த
நிபந்தனை கொண்ட முன்னறிவிப்பு அமைதி காத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். ஆகவே அவசரம்
என்றால் எழுந்து சென்று அவரிடம் வெளிப்படையாக கூற சொல்லி என்னை பொய்படுத்துங்கள். அவரிடமிருந்து
பிரசுரம் வாங்கி தாருங்கள். (அவ்வாறு என்னை பொய்படுத்தி அவர் பிரசுரம் தந்தால்) அதற்கு
பிறகு இறைவனின் செயலை பாருங்கள்." (அஞ்சாமே ஆத்ஹம் அடி குறிப்பு பக்கம் 32)
இந்த அறிவிப்பை ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் வெளியிட்ட பிறகு 12 வருஷம் வரை உயிரோடு
இருந்தார்கள். ஆனால் ஆட்சேபனை செய்து வந்தவார்களால் சுல்தான் முகம்மதுவிடம் இருந்து
அப்படி ஒரு பிரசுரம் வாங்கி தர அவர்களால் இயலவில்லை.
இவ்வாறு ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின்
கண்ணியத்திற்கும் உண்மைக்கும் அவர்களுடைய
முன்னறிவிப்புகள்
நிறைவேறியதற்கு முகம்மதி பேகத்தின் குடும்ப
அங்கத்தினர்களே
சாட்சி கூறியிருக்கும் போது மற்றவர்கள் அதைப் பற்றி கதைக் கட்டுவதைக் காணுகின்றபோது ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை. ஏனென்றால் அல்லாஹ்வின் புறமிருந்து வந்த அனைத்து நபிமார்களும் இவ்வாறே பொய்படுத்தப்பட்டும், அவதூறுகள் மற்றும் பரிகாசம் செய்யப்பட்டே வந்தார்கள். அல்லாஹ் கூறுகிறான், "அந்தோ! அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதர் வந்தாலும், அவரை அவர்கள்
பரிகாசம் செய்யாதிருந்ததில்லை." (36:30) இவ்வாறு இருக்கும்போது ஹஸ்ரத் மசீஹ் மஊத (அலை) அவர்களும் ஆட்சேபனை செய்யப்பட்டும், எந்தவித ஆதாரமும் இன்றி பொய்படுத்தப்பட்டும், பரிகாசமும் செய்யப்பட்டும் வந்தால் இது அவர்களின் உண்மைக்கே சான்று பகர்கிறதே அல்லாமல் பொய்படுத்தவில்லை என்பதை நடுநிலயோடு சிந்திப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இவர்களின்
எண்ணங்களும், திட்டங்களும் நிறைவேறப்போவதில்லை.
ஏனெனில் இறைத்தூதர்களை எதிர்த்தவர்கள் எக்காலத்திலும்
வெற்றிபெறவில்லை. மாறாக இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனார்கள்
என்பது வரலாறாகும். ஆனால் அல்லாஹ்வின் தூதர் நிச்சயமாக வெற்றி பெற்றே தீருவார்கள் என்பது இறைவனின் வாக்குறுதி. அல்லாஹ் கூறுகிறான், "நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக மிகைத்து விடுவோம்" என்று அல்லாஹ் விதித்துள்ளான்" (58:21) இதன் அடிப்படையில் ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) அவர்கள் வெற்றி பெற்றார்கள் வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள், இன்ஷா அல்லாஹ் இனியும் வெற்றி பெற்றே கொண்டே இருப்பார்கள்.
Post a Comment