சியால்கொட்டில் அஹ்மதிகளின் பள்ளி இடிப்பை குறித்து ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் கண்ட கஷ்ஃப்


கடந்த மே மாதம் 23 ஆம் தேதி அன்று இரவு, 24 ஆம் தேதி அன்று காலை நேரத்தில் ஹாஃபிழ் ஹாமிது ரஸா என்ற முல்லாவின் ஆக்ரோஷமான பேச்சினால் பாமர மக்கள் சிறிதும் யோசிக்காமல் அவனது பேச்சிற்கு அடிமையாகி பாக்கிஸ்தானில் சிறுபான்மையினராக கருதப்படுகிற அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் சியால்கோட் கிளையிலுள்ள அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் வரலாற்று சிறப்புமிகு பள்ளியினையும், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் ஸ்தாபகர் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலை அவர்களின் ஓர் கட்டிடத்தையும் இடித்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.

இதில் நாம் குறிப்பிடக்கூட விஷயம் என்னவென்று சொன்னால் அனைத்து தூதர்களுக்கும் அல்லாஹ் பல்வேறு முன்னறிவிப்புகளை அறிவித்தது போன்று ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹாக மற்றும் மஹ்தியாக திகழ்கின்ற மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்களுக்கும் அவரது காலத்திலும், அவர்கள் மறைந்த பிறகும் நடக்கவிருக்கின்ற பல்வேறு முக்கியமான விஷயங்களை முன்னறிவிப்பின் மூலம் அல்லாஹ் அறிவித்துள்ளான். இவையாவும் தத்கிரஹ் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் சியால்கோட்டில் நடந்த அந்த துயர சம்பவத்தை குறித்தும் அல்லாஹ் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி 1896 ஆம் ஆண்டு அன்று ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு அறிவித்துள்ளான். அந்த முன்னறிவிப்பு இதுவாகும்.

رَاَیْتُ کَاَنَّ مَسْجِدًا اَعْنِی الْمَسْجِدَ الَّذِی وَقعَ عِنْدَ السُّوْقِ قَدْ ھُدِّمَتْ۔ وَھَدَّمَہٗ رَجُلٌ۔ وَھَدَّمَ 
مَعَہٗ مَکَانًا لَّنَا۔ وَاَنَا اَقُوْلُ کَانَ ھٰذَا مَسْجِدًا فَنُفَوِّضُ الْاَمْرَ اِلَی اللہِ۔
(மஸாமீன் முதஃபர்ரிகா அஸ் ஹஸ்ரத் மஸீஹ் மவ்ஊது (அலை) பக்கம் 219 இலிருந்து எடுக்கப்பட்டது)
பொருள்: நான் பார்த்ததாவது, பஜாருக்கு அருகாமையிலுள்ள மஸ்ஜிது இடிக்கப்பட்டுவிட்டது. அதனை ஒரு மனிதன் இடித்தான். இதனுடன் அதற்கு அருகாமையில் அமைந்துள்ள எனது வீட்டினையும் இடித்துவிட்டான். இது மஸ்ஜிது ஆகும் என்று நான் கூறுகிறேன். ஆகவே இவ்விஷயத்தை நான் அல்லாஹ்விடம் ஓப்படைக்கிறேன்.
(நூல்: தத்கிரா, பக்கம் 228)

ஆக, சரியாக பஜார் திடலுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் இப்பள்ளியையும், ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் வீட்டினையும் கொடூர முல்லா ஹாஃபில் ஹமீது ரஸா என்பவனின் தூண்டுதலை அடுத்து பாமர மக்கள் ஒன்று கூடி இடித்துள்ளனர். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலை அவர்கள் தனது ஆன்மீக காட்சியில் கண்டதை போன்று பள்ளியை ஒரு நபரே உறுதிமொழி கூறி "நான் முன் நின்று எனது கையினால் பள்ளியை உடைப்பேன் என்று முழக்கமிட்டு தனது பள்ளியில் ஜுமுஆ பயான் அன்று கூறியிருக்கிறான். இதன் அடிப்படையிலே அவனே முன் வந்து பள்ளியின் மேலுள்ள கும்பாவை இடித்திருக்கிறான். இவ்வாறு ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் காட்டிய அந்த ஆன்மீக காட்சியில் "அதனை ஒரு மனிதன் இடித்தான்" என்ற முன்னறிவிப்பு மிகக் கச்சிதமாக நிறைவேறுகிறது. 

இன்று நடந்த இச்சம்பவத்தை இறைவன் அன்றே ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களிடம் கூறியிருக்கிறான். மேலும் இந்த விஷம காரியத்திற்கு எதிராக ஜமாஅத் எதிரான செயல் ஏதும் செய்யாமல் இச்சம்பவத்தை குறித்த காரியங்களை இறைவன் பக்கமே விட்டு விடவேண்டும் என்ற செய்தியினையும் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களுக்கு காட்டப்பட்ட அந்த ஆன்மீக காட்சியின் (கஷ்ஃபின்) மூலம் அஹ்மதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது அறிய முடிகிறது.

ஆகவே ஒரு பக்கம் இந்த சம்பவத்தினால் துக்கம் இருந்தாலும் மறுபக்கம் அல்லாஹ் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களை நான்தான் அனுப்பியுள்ளேன் அவரின் வாதங்கள் உண்மையானதே, அவரும், அவரின் ஜமாஅத்தும் உண்மையானதே என்பதை வெளிப்படுத்தியுள்ளான் என்பதை அறிந்து மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.


No comments

Powered by Blogger.