ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) மக்காவில் மரணம் அடைவார்கள் என்பதை குறித்த ஆட்சேபனைக்கான பதில்

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்களை குறித்த அடிப்படையற்ற பல்வேறு ஆட்சேபனைகளை அன்னாரின் எதிரிகள் செய்து வருகின்றனர். அதில் ஒன்றாக எதிரிகள் கூறி வருவது என்னவென்றால், மிர்ஸா சாஹிப் தனது மரணத்தை குறித்து தத்கிரா என்ற நூலில் இவ்வாறு தமக்கு வஹி வந்ததாக எழுதுகின்றார்கள், அதாவது "நாம் மக்காவில் மரணம் அடைவோம் அல்லது மதீனாவில் (மரணம் அடைவோம்)" (தத்கிரா பக்கம் : 503) பாருங்கள்; இவ்வாறு தமக்கு இல்ஹாம் வந்ததாக சொன்னவர் மக்காவிலும் மரணம் அடையவில்லை; மதினாவிலும் மரணம் அடையவில்லை மாறாக லாஹூரில் மரணம் அடைந்துள்ளார். ஆகவே இவர் (நஊதுபில்லாஹ்) தமக்கு வஹி வந்ததாக கூறிய விஷயத்தில் பொய்யராக இருக்கிறார் என்று ஆட்சேபனை செய்து வருகின்றனர்.

இதற்கு பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக என்பதே எமது முதல் பதிலாக இருக்கிறது. இரண்டாவது, எந்த நபருக்கு இறைவன் வஹி அறிவிக்கிறானோ அந்த நபரே மற்றவர்களை விட அந்த இல்ஹாமை குறித்து அந்த இல்ஹாமில் இறைவன் கூற வரும் நுட்பமான கருத்தை குறித்து அதிகம் அறிந்தவராக இருக்கிறார். அவர் தமக்கு வந்த இல்ஹாமை குறித்து என்ன விளக்கம் தருகிராரோ அதுவே தகுந்த மற்றும் ஏற்றத்தக்க விளக்கமாகவும் இருக்கும். இதனை முதலில் புரிந்து கொள்ள இந்த எதிரிகள் முன் வர வேண்டும்.


ஹஸ்ரத் அஹ்மது (அலை) பல்வேறு இடங்களில் பல்வேறு விஷயத்திற்கு அந்த விஷயத்தை எங்கு கூறுகின்றார்களோ ஒன்று அந்த இடத்திலே அதற்குரிய விளக்கத்தை தந்து விடுகிறார்கள் அல்லது தமது மற்ற நூட்களின் வாயிலாக தமது விளக்கத்தை அளித்து விடுகின்றார்கள். அன்னாரின் நூட்களை நாம் வாசிப்பதின் மூலம் இதனை நாம் அறிந்து கொள்ளலாம். இந்த வரிசையிலேயே ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களை குறித்த இந்த ஆட்சேபனையை எதிரிகள் எந்த நூலிலிருந்து எடுத்து வைக்கிறார்களோ அந்த நூலிலேயே, ஆட்சேபனை செய்யப்படும் அந்த இல்ஹாம் எங்கு இடம்பெற்றுள்ளதோ அந்த இடத்திலேயே இதற்கான விளக்கத்தையும் பதிவு செய்து வைத்துள்ளார்கள். ஆனால் எதிரிகள் தமது யூத குணத்தை வெளிப்படுத்துவதில் எந்தவொரு குறைவையும் காட்டாமல், ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களின் நூட்களிலிருந்து முன்பின் கூறப்பட்டுள்ள கருத்துக்களை எவ்வாறு மறைத்து முந்தைய நாட்களில் பாமர மக்களுக்கு முன் ஆட்சேபனையாக கூறி வந்தார்களோ அவ்வாறே இந்த இல்ஹாமை குறித்தும் கூறியுள்ளார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.

தத்கிரா என்ற நூல் பக்கம் 503 இல் இடம்பெற்றுள்ள எந்த வரியை குறித்து இவர்கள் ஆட்சேபனை செய்கின்றார்களோ அந்த இல்ஹாமிற்கு முன் முதல் இல்ஹாமாக (1)  "கதபல்லாஹு ல அக்லிபன்ன அன வ ருஸுலீ" என்ற இல்ஹாமும், இரண்டாவது இல்ஹாமாக (2) "ஸலாமுன் கவ்லம் மிர் ரப்பிர் ரஹீம்" என்ற இல்ஹாமும் எழுதப்பட்டுள்ளது. (3) மூன்றாவது இல்ஹாமாக "நாம் மக்காவில் மரணம் அடைவோம் அல்லது மதீனாவில்" என்பது  எழுதப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் குறிப்பிட்ட இந்த நூலில் குறிப்பிட்ட அந்த இடத்தில் குறிப்பிட்ட அந்த வரிக்கு கீழே என்ன எழுதியுள்ளார்களோ அதனை நாம் அவ்வாறே இங்கு பதிவு செய்கிறோம். ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

"(பொருள்) இறைவன் தானும் தனது தூதரும் நிச்சயமாக வெற்றி பெற்றே தீருவோம் என்பதை துவக்க காலங்களிருந்தே விதித்து வைத்துள்ளான். (2) சாந்தி உண்டாவதாக என்று கருணைமிக்க அந்த இறைவன்  கூறுகின்றான், அதாவது உமது மரணம் தோல்வியடைந்தவர்கள், இழிவானவர்களை போன்று இருக்காது. மேலும் மக்காவில் அல்லது மதீனாவில் மரணம் அடைவோம் என்ற இந்த வாசகத்தின் பொருள், (எமது) மரணத்திற்கு முன் மக்கத்தின் (போன்றதொரு) வெற்றிக்கான  பாக்கியம் கிடைக்கும். அதாவது அங்கு எதிரிகள் இறை கோபத்துடன் வெற்றி கொள்ளப்பட்டனர். அவ்வாறே இங்கும் எதிரிகள் இறை கோபத்துடனுள்ள அடையாளங்களினால் வெற்றி கொள்ளப்படுவர்.

இதன் இரண்டாவது பொருள், (எனது) மரணத்திற்கு முன்னர் மதீனத்து வெற்றி(யை போன்றதொரு வெற்றி) கிடைக்கும். அதாவது மக்களின் உள்ளங்கள் தாமாகவே நம் பக்கம் திரும்பி விடும். கதபல்லாஹு ல அக்லிபன்ன அன வ ருஸுலீ என்ற சொற்றொடர் மக்காவை சுட்டிக் காட்டுகிறது. மேலும், ஸலாமுன் கவ்லம் மிர் ரப்பிர் ரஹீம் என்ற சொற்றொடர் மதீனாவை சுட்டிக் காட்டுகிறது.
(பத்ர் பாகம் 2 நம்பர் 3 தேதி 19 ஜனவரி 1906 பக்கம் 2. அல்-ஹகம் பாகம் 10 நம்பர் 2 தேதி 17 ஜனவரி 1906 பக்கம் 3) (நூலின் பக்கம் கீழே)


நடுநிலையாளர்கள் மேலே குறிப்பிட்டுள்ள ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களின் கூற்றை படித்தவுடன் எதிரிகளாகிய இவர்கள் எந்த அளவுக்கு தரங்கெட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதையும், ஒருவரை எதிர்க்க வேண்டும் என்று சொன்னால் அதில் இவர்கள் எந்த நடுநிலையையும் கடைபிடிப்பதில்லை என்பதையும், எந்த நிலைக்கும் செல்வார்கள் என்பதையும்  விளங்கியிருப்பார்கள். இதற்கு மேல் சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை. யார் பொய்யர்கள், யார் உண்மையாளர்கள் என்பதற்கான முடிவை உங்கள் பக்கமே நான் விட்டு விடுகிறேன்.

No comments

Powered by Blogger.