ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் மரணத்தை குறித்த ஆட்சேபனைக்கான பதில்

வழக்கம்போல் ஹஸ்ரத் அஹ்மத் அலை அவர்களின் மீது எதிரிகள் கண்மூடித்தனமான ஆட்சேபனையை வைத்து வருவதைப் போன்று ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் மரணத்தை குறித்தும் இவர்கள் ஆட்சேபனை செய்து வருகின்றனர். எதிரிகள் கூறுவதாவது; ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் வயிற்றுப் போக்கில் அவதிப்பட்டு காலரா நோயினால் கழிவறையில் மரணம் அடைந்தார் இவ்வாறு அல்லாஹ் ஓர் இழிவான மரணத்தை வழங்கியுள்ளான். (நஊதுபில்லாஹி மின் தாலிக்) இவ்வாறானவர் எவ்வாறு நபியாக இருக்க முடியும். தனது நபித்துவ வாதத்தில் எவ்வாறு உண்மையானவராக இருக்க முடியும்? என்று கேள்வி கேட்கின்றனர்.

இவர்களின் இந்த ஆட்சேபனை சரியானதுதானா? இல்லை இது இவர்களின் காழ்ப்புணர்ச்சி கலந்த பொய் புரட்டுகளா என்பதை நாம் கீழே காண்போம்.


ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் இரவு பகலாக இஸ்லாத்தை குறித்து ஆட்சேபனை செய்யும் எதிரிகளுக்கு பதில் அளிக்கும் வகையில் மனவேதனையுடன் தமது நேரத்தை முழுவதுமாக இஸ்லாத்திற்காக செலவளித்து வந்தார்கள். இதன் காரணமாக அன்னார் அநேக நேரம் உண்ணாமலே இருந்தார்கள். இதன் விளைவாக பலகீனம் ஏற்பட்டு வயிற்றுப்போக்கு பல நேரம் ஏற்பட்டது. நடந்தது என்னவென்றால், என்று ஹஸ்ரத் அஹ்மத் (அலை) மரணம் அடைந்தார்களோ அதை ஒட்டிய பல நாட்களன்று தொடர்ந்து இரவு பகலாக எழுதுவது, மற்றும் உரையாற்றுவதில் ஈடுபாடோடு ஓய்வில்லாமல் இருந்தார்கள். எந்த அளவுக்கு என்றால், மரணத்திற்கு 20 மணி நேரம் முன்பும் அன்னார் கற்றறிந்தவர்களின் மத்தியில் மிக நீண்ட நேர ஓர் உரையை ஆற்றினார்கள். இதன் விளைவாக உடல்நிலை மிகவும் பலகீனமானது. பிறகு இரவு நேரம் அன்று இதன் காரணமாக வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது. இதற்கும் காலரா நோயிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மருத்துவர்களும் இவ்வாறு சொன்னதாக எந்தவோர் அறிவிப்பும் நாம் காண முடியாது.

ஹஸ்ரத் மீர் நாஸிர் நவாப் (ரலி) அவர்களின் ஓர் அறிவிப்பை பிடித்து கொண்டு ஹஸ்ரத் மஸீஹ் மவ்ஊத் (அலை) அவர்களின் மரணத்திற்கான காரணம் காலரா நோயே, இதுவே அவர்களின் பொய் வாதத்திற்கான சான்றாகும் என்று யார் கூறுகின்றார்களோ அவர்கள் ஹஸ்ரத் மசீஹ் மவூத் அலை அவர்களின் எதிரிகளே ஆவார்கள். உண்மை என்னவென்றால், ஹஸ்ரத் மீர் நாஸிர் நவாப் (ரலி) அவர்களின் இந்த அறிவிப்பின் மூலம் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் காலரா நோயின் காரணமாகத்தான் மரணம் அடைந்தார்கள் என்று கூறுவது தவறாகும்.   

ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) அவர்கள் "எனக்கு காலரா வந்துவிட்டதா?" என்று கேட்டதாகவே இந்த அறிவிப்பின் மூலம் அறிய முடிகிறது. இவ்வாறு கேட்பதினால் உண்மையிலேயே அவர்களுக்கு இவ்வாறான நோய் இருந்தது என்ற முடிவுக்கு வருவது சரியல்ல. ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் எனக்கு காலரா ஏற்பட்டு விட்டதா? என்று கேட்டார்களே அல்லாமல் இதன் மூலமாக அவர்களுக்கு உண்மையிலேயே காலரா இருந்தது என்று பொருள் கொள்ள முடியாது. இவ்வாறு ஒரு விஷயத்தை கேட்பதனால் அது உண்மையிலேயே இருந்தது என்று பொருள் கொள்ள முடியாது. அன்னாருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்த இந்நிலையில் அதிகமாக பலகீனம் ஏற்பட்டது.

மேலும் காலரா நோய் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் மரணம் அடைந்த அந்த நேரத்தில் அதாவது ஏப்ரல், மே 1908 அன்று எங்கும் இருந்ததாக, வரலாற்றில் எங்கும் பதிவு செய்யப்பட்டதாக காண முடியாது. மேலும் லாஹூரில் இந்த நோயின் காரணமாக யாரும் மரணித்ததாக எந்த வரலாற்றிலும் பதிவு செய்யப்படவில்லை. மேலும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கும் காலரா நோயிற்கான எந்த அறிகுறியும் இருந்ததில்லை. இதன் காரணமாகவே அப்போது ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மேஜர் டாக்டர் சித்ர்லேண்டு பிரின்சிபில் மெடிக்கல் காலேஜ் லாஹூர் அவர்கள் "வயிற்றுப் போக்கின் பலகீனமே" அன்னாரின் மரணத்திற்கு காரணம் ஆகும் என்று சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். அப்போதிருந்த அனைத்து மருத்துவர்களும் டாக்டர் சித்ர்லேண்டின் இக்கருத்துக்கு உடன்பட்டவர்களாகவே இருந்தனர். ஏனென்றால் இதைத் தவிர வேறு எந்த உண்மையும் இருந்ததில்லை. இதே போன்று லாஹூரின் மற்றுமொரு டாக்டர் லிங்கம் சிவல் சர்ஜினும் மிர்ஸா சாஹிபிற்கு வயிற்றுப்போக்கினால் ஏற்பட்ட பலகீனமே மரணத்திற்கு காரணம் என்று சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்த வயிற்றுப்போக்கின் காரணமாக பலகீனம் ஏற்பட்டதே அல்லாமல் காலரா அல்ல என்று கூறியுள்ளார்.

மேலும் வலுவான ஓர் சான்றாக இறைவன் ஏற்படுத்தியுள்ள ஓர் விஷயம் என்னவென்றால், "அன்னாரின் ஜனாஸாவை லாஹூரின் ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்து ரயில் பெட்டியில் வைத்த போது சில முரட்டு குணமுள்ளவர்கள் ஸ்டேஷன் மாஸ்டரிடம் மிர்ஸா சாஹிப் காலராவினால் மரணம் அடைந்துள்ளார் என்று புகார் கூறினர். ஏனென்றால், காலராவினால் பாதிக்கப்பட்ட நபரை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது சட்டத்திற்கு எதிரானதாக இருந்தது. இதன் காரணமாக ஸ்டேஷன் மாஸ்டர் ஜனாஸாவை அனுப்ப மறுத்துவிட்டார். இதைக் கேட்ட அன்னாரின் ஓர் தோழர் ஷேக் ரஹ்மதுல்லாஹ் சாஹிப் அவர்கள் டாக்டர் சிவல் சர்ஜன் அவர்களின் சான்றிதழை காட்டினார். இதைக் கண்ட ஸ்டேஷன் மாஸ்டருக்கு உண்மை தெரிய வந்தவுடன் ஹஸ்ரத் மிர்ஸா சாஹிப் அவர்களை குறித்து புகார் தெரிவிப்பவர்கள் பொய்யர்கள் என்பதை அறிந்து கொண்டு, ஜனாஸாவை கொண்டு செல்ல அனுமதித்தார். இவ்வாறு அன்னாரின் அருளுக்குரிய ஜனாஸா காதியான் கொண்டு வரப்பட்டது.  

இவ்வனைத்து சம்பவங்களும் அஹ்மதிய்யத் வரலாறு பாகம் 3 பக்கம் 562 இல் விபரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மேற்கண்ட அனைத்து சம்பவங்களும் எதிரிகளின் ஆட்சேபனை தவறானது என்பதை எடுத்து காட்டுகிறது. இன்னும் சிலர் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் மரணம் அடையும் போது கூட கலிமா சொல்வதற்கான பாக்கியம் கிடைக்கவில்லை என்றும் இறுதியாக தமது வாயிலிருந்து "எனக்கு காலரா வந்துவிட்டது " என்று மட்டுமே கூறினார்கள் என்று பொய்யர்கள் எந்தவோர் அடிப்படை ஆதரமுமின்றி ஆட்சேபனை செய்கிறார்கள்.

ஹஸ்ரத் மிர்ஸா பஷீர் அஹ்மத் சாஹிப் (ரலி) அவர்கள் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் மரண நிலையை குறித்து இவ்வாறு அறிவிப்பு செய்கின்றார்கள்:
"அன்னாரின் வாயிலிருந்து "அல்லாஹ்! எனது அன்பான இறைவனே!" இந்த சொற்கள் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. இதை தவிர வேறொன்றும் கூறவில்லை. சுபுஹூ நேரம் அன்று நானும் (ஹஸ்ரத் மிர்சா பஷீர் அஹ்மத் ரலி)) அன்னாருக்கு அருகாமையில் நின்றிருந்தேன். மிக தாழ்ந்த குரலில் "தொழுகைக்கான நேரம் வந்துவிட்டதா?" என்று கேட்டார்கள். ஒரு தொண்டன் "ஆம் ஹஸூர்" என்று பதிலளித்தார். இதைக் கேட்ட ஹஸ்ரத் அஹ்மத் (அலை) தான் படுத்திருந்த படுக்கையின் இரு கரையோரமும் தனது கரங்களை தடவி தயம்மும் செய்து விட்டு தொழுகைக்கான நிய்யத் கொண்டார்கள். ஆனால் அதே நேரம் மயக்கமுற்ற நிலையில் ஆகிவிட்டார்கள். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிவுற்றதும், "தொழுகைக்கான நேரம் வந்துவிட்டதா?" என்று கேட்டார்கள். ஆம் ஹஸூர் என்று பதிலளிக்கப்பட்டது. பிறகு தொழுகைக்கான நிய்யத் செய்து படுத்திருந்தவாறே தொழுகையை நிறைவேற்றினார்கள். இதன் பிறகு சிறிதளவு மயக்க நிலை ஏற்பட்டது. ஆனால் பிறகு மயக்கம் தெளிவுற்றதும் "அல்லாஹ்! எனது அன்பான இறைவனே!" என்ற அதே சொல்லை திரும்பவும் கூறலானார்கள்.....இறுதியாக 10:30 மணியளவில் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) இரண்டு முறை மூச்சை நீட்டி இழுத்து விட்டார்கள். இவ்வாறு அன்னாரின் உயிர் என்றென்றும் நிலைத்திருக்கும் அந்த இறைவனிடம் சென்றது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (சில்ஸிளா அஹ்மதிய்யா பக்கம் 183-184)

மேலும் சிலர் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் நஊதுபில்லாஹ் கழிவறையில் மரணம் அடைந்தார்கள் என்ற ஒரு பொய் ஆட்சேபனையை முன் வைக்கின்றார்கள். இது முழுக்க முழுக்க அப்பட்டமான பொய்யாகும். இதற்குரிய தகுந்த ஆதாரத்தை எதிரிகளால் எடுத்து வைக்க முடியவே முடியாது. இவ்வாறான ஆட்சேபனையை இந்த எதிரிகள் தனது சுய நலனை கருத்தில் கொண்டு, காழ்புணர்ச்சியோடு செய்கின்றார்களே அல்லாமல் இதில் எந்த உண்மையும் இல்லை. இவ்வாறானவர்களுக்கு 'பொய்யர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக' என்ற ஒரு பதில் மட்டுமே எமது சுருக்கமான பதிலாகும்.

No comments

Powered by Blogger.