ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் உண்மைத்துவம் - திருக்குர்ஆன் ஆதாரம் 1
அல்லாஹ் ஓர் உண்மை நபிக்கான அளவுகோலாக பல்வேறு
அளவுகோலை திருக்குர்ஆனில் கூறியுள்ளான். அதில் ஒன்று சூரா அல்-ஹாக்காவின் 45-48 வசனங்கள்
ஆகும். அல்லாஹ் இதில் இவ்வாறு கூறுகின்றான்:
وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ-لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ-ثُمَّ
لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ-فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ
அன்றியும், அவர் நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக்
கூறியிருப்பாரானால். நாம். அவரை வலக்கையால் பற்றிப்
பிடித்துக் கொண்டு. பின்னர், அவருடைய
நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத்
தடுப்பவர்களில்லை. (69:45-48)
இந்த வசனத்தில் அல்லாஹ் ஒரு மனிதன் பொய் வாதம்
செய்து எனக்கு அல்லாஹ் இவ்வாறு வஹியை அறிவிக்கின்றான் என்று இட்டுக்கட்டிக்
கூறினால் அவனை நாம் அவனது குறிக்கோளில் வெற்றி அடைய விடாமல் தடுத்து அவனை அழித்து
விடுவோம் என்று கூறுகிறான். அது மட்டுமல்லாமல் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்)
அவர்களுக்கு அவர்களின் வாதத்தின் உண்மைத்தன்மையை நிரூபிக்கும் விதமாக
(நஊதுபில்லாஹ்) அவர்களை அழிக்காமல் சுமார் 23 வருட காலம் வாழ வைத்தான். ஆக, அன்னார்
(ஸல்) அவர்களின் குறிக்கோளை வெற்றி அடைய செய்து அவர்கள் 23
வருட காலம் வாழ்ந்திருந்தது ஓர் உண்மை நபிக்கான அடையாளமாக இருக்கிறது.
சிலர் நமது இந்த வாதத்தை வைத்து அல்லாஹ் இந்த
வசனத்திலோ அல்லது குர்ஆனில் வேறு ஏதேனும் இடத்திலோ அல்லது ஹதீஸிலோ ஓர் உண்மை
நபிக்கான அளவுகோலாக 23 வருடம் காலத்தை வரம்பாக நியமித்துள்ளான என்பதை
நிரூபித்து காட்டுங்கள் என்று கேட்கின்றனர்.
இந்த வசனத்திலிருந்து புரியக்கூடிய முதல்
விஷயம்
நபி (ஸல்) அவர்கள் எனக்கு அல்லாஹ் இவ்வாறு வஹீ அறிவித்துள்ளான் என்று (நஊதுபில்லாஹ்) பொய் கூறினால்
அதன் விளைவு அல்லாஹ் அவர்களை இவ்வுலகில் அவர்கள் தனது கொள்கையை அடைய விடாது
தடுத்து அவர்களை தோல்வி அடைய செய்து அழித்து விடுவான். ஆனால் அவ்வாறு நிகழவில்லை.
அவர்கள் எனக்கு இறைவன் வஹீ அறிவிக்கின்றான் என்று தொடர்ந்து கூறி சுமார் 23 வருட
காலம் வாழ்ந்தார்கள்.
ஆகவே ஒருவர் தான் இறைவனால் அனுப்பபட்டவர் என்று
கூறி எனக்கு இறைவன் வஹீ அறிவிக்கின்றான் என்று கூறி தனது வாதத்தில் அவர்
உண்மையாளராக இருக்கிறாரா இல்லையா என்பதை நாம் அறிந்து கொள்ள நபி (ஸல்) அவர்களின் 23 வருட
வாழ்க்கை மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள வசனம் இவ்விரண்டையும் வைத்து நாம்
பார்ப்பது அவசியமாகும்.
திருக்குர்ஆனிற்கு முதல் விளக்கம் ஹதீஸ் ஆகும்.
ஆகவே இந்த வசனத்திற்கு முதலில் ஹதீஸ் விளக்கத்தை தாருங்கள் என்று சிலர்
கேட்கின்றனர். நாம் அன்னாரின் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை ஆதாரமாகவும் மேலே
கூறப்பட்டுள்ள வசனத்தையும் ஒரு உண்மை நபிக்கான அளவுகோலாக வைக்கிறோம். அவர்களின் 23 வருட
கால வாழ்க்கை நமக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. அல்லாஹ் கூறும் இந்த வசனத்தின்
அடிப்படையில் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் (நஊதுபில்லாஹ்) அழிந்து போகாமல்
தனது குறிக்கோளில் வெற்றி பெற்று சுமார் 23 வருடம்
காலம் வாழ்ந்தார்கள். ஆகவே ஒரு பொய் வாதி எனக்கு இறைவன் வஹீ மூலம் பேசி
கொண்டிருக்கிறான், இதனை
எனக்கு வஹீ அறிவித்துள்ளான் என்று இறைவன் பெயரை சுட்டி காட்டி கூறுவார் என்றால்
அவர் குறைந்தது இத்தனை வருடம் அதாவது 23 வருடம்
வாழ்ந்திருக்க மாட்டார். இதனை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் 23 வருட
காலம் உண்மைப் படுத்துகிறது.
இதன் அடிப்படையில் ஹஸ்ரத் அஹ்மத் (அலை)
அவர்களும் பொய் வாதி வாதம் செய்து 23 வருட
காலம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்று இருந்தால் எடுத்து காட்டுங்கள் நான்
அவர்களுக்கு 500 ரூபாய்
இலவசமாக தருகிறேன் என்று தனது "அர்பயீன்" என்ற நூலில் கூறியுள்ளார்கள். தவ்ராத்திலும்
கூட ஒரு பொய் வாதி கொல்லப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. (உபாகமம் 18:20, 13:5)
பல்வேறு திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும் கூட
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் இந்த கூற்றை உண்மைப் படுத்தியுள்ளார்கள்.
இமாம் இப்னு கய்யூம் (ரஹ்) அவர்கள் தனது நூலில்
கூட கிறித்தவர்களோடு நடந்த ஒரு விவாதத்தில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின்
உண்மைத்துவத்தை எடுத்து கூறும்போது இவ்வாறு கூறுகின்றார்கள்:
"ஒரு வாதி (அதாவது நான் இறைவன் புறமிருந்து
அனுப்பப்பட்டுள்ளேன் என்று வாதம் செய்யும் வாதி) இறைவன் மீது சுமார் 23 ஆண்டு
காலமாக இட்டுக்கட்டி வந்து பிறகும் கூட இறைவன் அவரை அழிக்காமல் அவருக்கு உதவி
புரிகிறான் என்றால் அது எவ்வாறு சாத்தியமாக இருக்க முடியும்? இவ்வாறான வாதி எந்த வகையிலும் பொய்யராக இருக்க
முடியாது" என்று கூறுகிறார்கள். (பார்க்க ஸாதுல் மஆது பாகம் 1 பக்கம் 500)
மேலும் அவர்கள் கூறுகின்றார்கள்:
“பல்வேறு
பொய் வாதிகள் தோன்றி இருக்கிறார்கள். அவர்களுக்கும் பேரும் புகழும்
வெளிப்பட்டுள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அவர்களின் குறிக்கோள் எப்போதும்
நிறைவேறவில்லை. அவர்களின் வாழ்வும் நீடித்தது இல்லை. மாறாக இறைவன் தனது
மலக்குமார்களை அவர்களுக்கு எதிராக அனுப்பி வைக்கிறான். அவர்கள் (மலக்குமார்கள்)
அவர்களின் அடையாளத்தை அழித்து விடுகிறார்கள். அவர்களின் அடித்தளத்தை நீக்கி
விடுகிறார்கள். உலகம் தோன்றியதிலிருந்து இதுதான் இறைவனின் நடைமுறையாக இருந்து
வருகிறது. (ஸாதுல்
மஆது பாகம் 1 பக்கம் 500)
இமாம் திப்ரி (ரஹ்) அவர்கள் தனது தஃப்ஸீரில்
இவ்வாறு எழுதுகின்றார்கள்:
"இறைவன் பொய் நபித்துவ வாதிக்கு , இறைவன் எனக்கு வஹீ அறிவிக்கின்றான் என்று
பொய்யாக வாதம் செய்பவருக்கு உடனே தண்டனை வழங்குகிறான். இதில் எவ்விதத்திலும்
தாமதம் செய்வதில்லை.” (தஃப்ஸீர் இப்னு ஜரீர் பாகம் 29, பதிப்பகம் மேமென்யா பக்கம் 37 எகிப்து)
இவ்வாறு பல்வேறு விரிவுரையாளர்கள் இந்த
வசனத்தின் மூலம் ஒரு பொய் வாதியை பிரித்தறியலாம் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.
அல்லாஹ் கூறுகின்றான்:
"நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை
இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். (இத்தகைய பொய்யர்கள்
அனுபவிப்பதெல்லாம்) சொற்ப இன்பம் தான்; அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு. (16:116,117)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
"(நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம்
அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக்
கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற
நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள். மேலும், நாம் உம்மை (உண்மையான பாதையில்) உறுதிப்படுத்தி
வைத்திருக்கவில்லையெனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல்
கூடும். (அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு
(வேதனையும்,) மரணத்தில்
இரு மடங்கு (வேதனையு)ம் நுகருமாறு நாம் செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர்
காணமாட்டீர். (17:73-75)
ஆகவே ஒரு பொய் வாதியுடன் உண்மை வாதி கலந்து
விடக்கூடாது என்பதற்காக இறைவன் நியமித்துள்ள ஒரு அளவுகோல் அல்ஹாக்கா வசனம் ஆகும்.
இல்லை என்றால் இறைவன் இந்த வசனம் மூலம் ஒரு பொய் வாதியை நாம் அழித்து விடுவோம்
என்று கூறுவதில் அர்த்தம் இல்லாமல் போய்விடும். ஆகவே ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள்
இந்த வசனத்தின் அடிப்படையில் 23 வருட
காலம் வாழ்ந்து தனது குறிக்கோளில் வெற்றி கொண்டது அவர்களின் உண்மைத்தன்மையை
வெளிப்படுத்துகிறது. இதுவே ஒரு உண்மை நபிக்கான ஒரு அளவுகோலாகவும் இருக்கிறது.
சிலர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை)
அவர்களோ 23 வருட காலம் வாழவில்லையே அவர்கள் இறைவன் என்னோடு
பேசுகிறான் எனக்கு வஹீ அறிவிக்கின்றான் என்று வாதம் செய்தது 1891 ஆம் ஆண்டு என்றும் அவர்கள் மரணம் அடைந்ததோ 1908 ஆம் ஆண்டு என்றும் ஆக 17 வருடங்கள்தானே
வாழ்ந்தார்கள். பிறகு உங்கள் வாதப்படி பார்த்தால் அவர்களே (நஊதுபில்லாஹ்) பொய்யராக
இருக்கின்றார்களே? என்று ஆட்சேபனையை வைக்கின்றனர்.
இவ்வாறு ஆட்சேபனை செய்பவர்களுக்கு தவறான எண்ணம்
ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், அல்லாஹ் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை)
அவர்களுக்கு முதன் முதலில் அறிவித்திருந்த பல்வேறு வஹீ யை "பராஹீனே
அஹ்மதிய்யா எனும் நூலில் எழுதியுள்ளார்கள். இந்த நூல் 1880 ஆம் ஆண்டுதான் அச்சிட்டே வெளியிடப்படுகிறது.
இதற்கு முன்பிருந்தே அவர்களுக்கு ஒரு சில வருடங்களாக இல்ஹாம் வந்துள்ளது. நாம்
இந்த நூல் அச்சிட்ட காலத்தை வைத்து அளவிட்டாலும் சுமார் 28 வருடம்
அவர்கள் வாழ்ந்துள்ளார்கள். 1880-1908=
28 ஆகும்.
ஆகவே தாங்கள் வைத்த ஆட்சேபனை தவறாகும்.
ஆகவே ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை)
அவர்கள் அல்லாஹ் என்னை இக்காலத்தின் தீர்க்கதரிசியாக, இமாம்
மஹ்தியாக வாதம் செய்து என்னிடம் அல்லாஹ் பேசுகிறான் என்று கூறி சுமார் 30 வருடம்
வாழ்ந்து சென்றுள்ளார்கள். அது மட்டுமல்ல அவர்கள் வந்த நோக்கத்தை அல்லாஹ் நிறைவு
செய்துள்ளான். இதன் அடிப்படையில் சூரா அல்-ஹாக்காவின் (69 வது
அதிகாரம்) 45-48 வசனங்கள் அன்னாரின் உண்மைக்கு ஒரு சான்றாக அமைகிறது என்பது
மறுக்கப்படாத உண்மையாகும்.
Post a Comment