பண்டிட் லேக்ராமின் மரணமும் - ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் முன்னறிவிப்பும்

பண்டிட் லேக்ராமின் மரணம் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் உண்மையை பகிரங்கப்படுத்திய மாபெரும் அடையாளங்களுள் ஒன்றாகும்.

1880 களில் அப்போது இந்தியாவில் புதிதாக தோனறியிருந்த ஆரிய சமாஜம் என்ற இந்து அமைப்பு முஸ்லிம்களை இந்துக்களாக மாற்றும் சுத்தி இயக்கத்தை தீவிரமாக நடத்தி வந்தனர். முஸ்லிம்களின் பலவீனமான நிலையை பயன்படுத்தி இஸ்லாத்தின் மீது குற்றச்சாட்டுகளும் ஆட்சேபனைகளும் பரப்பப்பட்டன.

அந்த நேரத்தில்தான் இஸ்லாத்தின் உண்மைக்கும், ரஸுல் (ஸல்) அவர்களின் உண்மைக்கும், திருக்குர்ஆனின் மகத்துவத்திற்கும் ஆதரவாக மறுக்கமுடியாத 300 ஒளிமிக்க சான்றுகளுடன் கூடிய பராஹீனே அஹ்மதிய்யா என்ற நூலை ஹஸ்ரத் மிர்ஸா குலாம் (அலை) அவர்கள் வெளியிட்டிருந்தார்கள். இஸ்லாத்தின் உண்மையை மறுக்கக்கூடியவர்கள் அந்நூலில் உள்ள சான்றுகளை மறுத்துக்காட்டினால் ருபாய் 10000 பரிசு தரப்படும் என்றும் அன்னார் சவால்விட்டிருந்தார்கள்.

லேக்ராம் என்பவர் தமது போலீஸ் பணியை துறந்துவிட்டு முழு நேர ஆரியசமாஜ பிரச்சார பணியிலும் சுத்தி இயக்கத்திலும் ஈடுபடலானார். சுவாமி தயானந்த சரஸ்வதியின் தீவிர பக்தனான இவர் லாகூரில் ஆரிய சமாஜ பரிவர்த்தனை சபை நடத்தி வந்தார்.
Ref:- http://en.wikipedia.org/wiki/Pandit_Lekh_Ram

லேக்ராம் இஸ்லாத்திற்கெதிராகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கெதிராகவும், திரக்குர்ஆனுக்கெதிராகவும் இழித்துரைத்தும் பழித்துரைத்தும் பேசியும் எழுதியும் வந்தார். மனிதர்களுள் மிகச்சிறந்தவரை மிக இழிந்தவர் (நவூதுபில்லாஹ்) என்றும், மிகச் சிறந்த வேதநூலை மிக மோசமான நூல் (நவூதுபில்லாஹ்) என்றும் பிரச்சாரம் செய்து வந்தார். சொல்வதற்கு வாய்கூசும் அசிங்கமான வசனங்களை திருக்குர்ஆனின் வசனங்கள் என்று துணிந்து கூறிவந்தார்.

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் லேக்ராமுக்கு புரிய வைப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. லேக்ராம் நபி (ஸல்) அவர்களை மேலும் மேலும் இழிவாக பேசிவந்தான்.

அப்போது ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் லேக்ராமின் பிரச்சினையை இறைவனிடம் வைப்பதாகவும் அவனுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் அவனது முடிவுகுறித்து முன்னறிவிப்பு வெளியிடப் போவதாவும் அறிவித்தார்கள். அப்போது லேக்ராம் அப்படி ஒரு முன்னறிவிப்பை தாராளமாக வெளியிடலாம் எனறும் ஆனால் அதில் கால நிர்ணயம் செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் துணிச்சலுடன் கூறினான்.

அப்போது வாக்களிக்கப்பட்ட மஸீஹாகவும் இமாம் மஹ்தியாகவும் வாதம் செய்து வந்த ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் 1893- ம் ஆண்டு பிப்ரவரி 20 –ம் நாள் அன்றிலிருந்து ஆறு வருடத்திற்குள் லேக்ராமின் மரணம் நிகழும் என்று தனக்கு கிடைத்த இறைஅறிவிப்பை பிரசுரம் மூலம் வெளியிட்டார்கள்.

அதே ஆண்டு அவர்கள் தாம் பெற்ற கீழ்கண்ட இறை
அறிவிப்புகளையும் வெளியிட்டார்கள்.

”வழிகெட்ட பகைவனே முஹம்மத் (ஸல்) அவர்களை ஏன் பழிக்கின்றாய்? முஹம்மதின் வாளுக்கு அஞ்சிக்கொள் “

“இது ஒரு உயிரற்ற கன்று குட்டி. இதனிடமிருந்து பொருளற்ற கதறலே வெளிவரும். இவனது பழித்துரைத்தல் காரணமாக கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.”

“ஆறு வருடத்திற்குள் இவனது கதை முடிக்கப்படும்”.

“நீர் பெருநாளுக்கு ஒட்டியுள்ள நாளில் மகிழ்ச்சியடைவீர்”

மேற்கண்ட முன்னறிவிப்புகளை அன்னார் 1893-ல் வெளியிட்ட ”பராக்காது துஆ, ஆயினே கமாலாத்தே இஸ்லாம், கராமத்து ஸாதிகீன்”
ஆகிய நூற்களில் பதிவு செய்ததோடு அவற்றை பிரசுரங்கள் மூலமும் வெளியிட்டாரகள்.

மேலும் அவர்களது ”பரக்காத்து துஆ” நூலில் அவர்கள் கண்ட ஆன்மீக காட்சி ஒன்றையும் பதிவு செய்திருந்தார்கள். அது இவ்வாறாகும்:

”இன்று 1893, ஏப்ரல் மாதம் 2-ம் நாள் ( ஹிஜ்ரி 1310 ரமலான் 14 ) அதிகாலை நான் அரைத்தூக்கத்தில் இருந்தபோது நான் இந்த ஆன்மீக காட்சியை கண்டேன். நான் ஒரு பெரிய வீட்டில் இருக்கிறேன். நமது சில நண்பர்களும் இருக்கின்றனர். திடீரென எனக்கு முன்னர் சிவந்த கண்களுடன் பயங்கர தோற்றத்தில் ஒரு மனிதர் வந்து நிற்பதை கண்டேன். அவரை மனிதனாக நான் நினைக்கவில்லை. மாறாக இது அச்சத்தை தரும் பயங்கரமான ஒரு மலக்கு என்றே நான் கருதினேன். பார்ப்பவர் மனதில் திகைப்பூட்டும் தோற்றத்தில் அவர் இருந்தார். நான் அவரைப் பார்த்துக் கொண்டிருந்த போதே அவர் என்னிடம் ” லேக்ராம் எங்கே?” எனக் கேட்டார். பிறகு இன்னொருவரின் பெயரையும் குறிப்பிட்டு அவர் எங்கிருக்கிறார் என்றும் கேட்டார். அப்போது நான் இவர் லேக்ராமிற்கும் அந்த மற்றொரு நபருக்கும் தண்டனை தருவதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார் என அறிந்துகொண்டேன்”.

இந்த முன்னறிவிப்புகள் ஆர்ய சமாஜ தலைவர்களுக்கு பிரசுரம் மூலம் அறிவிக்கப்பட்டது. அதில்,

” உங்களது மார்க்கம் உண்மையானது என நீங்கள் கருதினால் இப்போது உங்களுக்கான ஓரே வழி லேக்ராமை காப்பாற்றுவது தான், அதற்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.”

20, பிப்ரவரி 1893- ல் வெளியிடப்பட்ட பிரசுரம்: ( ஆயினே கமாலாத்தே இஸ்லாமிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது),

” இன்று இந்த முன்னறிவிப்பை நான் முஸ்லிம், இந்து, கிறித்துவ மக்களுக்கு எட்டவைக்கிறேன். இன்றிலிருந்து ஆறு வருடத்திற்குள் இந்த மனிதன், சாதாரண முறையில் அல்ல, அசாதாரண முறையில் அனைவருக்கும் திகைப்பூட்டக்கூடிய வேதனைமிக்க இறைதண்டனையால் பிடிக்கப்படவில்லையென்றால், நான் இறைவன் புறமிருந்து வந்தவனல்ல வென்றும், இந்த முன்னறிவிப்புகள் இறை அறிவிப்புகள் அல்லவென்றும் நீங்கள் கருதிக் கொள்ளுங்கள்.அப்போது நீங்கள் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் தரலாம். என்னை நீங்கள் தூக்கில் கூட தொங்கவிடலாம் என்று நான் கூறிக்கொள்கிறேன்”

இந்த அறிவிப்பினை பத்திரிக்கைகளும் பேசின.
மீரட்டிலிருந்து வெளிவந்த ஒரு இந்து பத்திரிக்கையான அனீஸேஹிந்த் ஒரு ஆட்சேபனை வெளியிட்டிருந்தது.

அதாவது ஒரு மனிதனுக்கு ஆறு வருடத்தில் ஏதாவது காய்ச்சல், காலரா வந்து அதனால் மரணிக்க கூட வாய்ப்பு இருக்கிறது என கூறியது.

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) இந்த கருத்திற்கு தமது நூலான பராக்காத்து துஆவில் அனீஸேஹிந்த நூலின் ஆட்சேபனைக்கு பதில் என்ற தலைப்பில் இவ்வாறு கூறியுள்ளார்கள்.

”ஆறு வருடத்திற்குள் இந்த மனிதன் சாதாரண காய்ச்சல் காரணமாகவோ, காலரா காரணமாகவோ மரணித்தால், அப்பொழுதும் நான் பொய்யனும், ஏமாற்றுக்காரனுமாவேன். நான் குறிப்பிட்ட தண்டனையை நீங்கள் எனக்குத் தரலாம். ஏனெனில் இவை சாதாரணமாக எவருக்கும் வரக்கூடியவைதான்”

இதற்கிடையில் லேக்ராம் தனது ஏச்சு பேச்சுக்களை நிறுத்தவில்லை. அதோடு மட்டுமல்லாமல் ஒரு முன்னறிவிப்பையும் வெளியிட்டார்.
அதாவது, ” எனக்கு எனது பரமேஸ்வரன் அறிவித்தான். இந்த மிர்ஸா 3 ஆண்டுகளுக்குள் காலராவில் மரணிப்பார்”

மேற்கூறப்பட்ட முன்னறிவிப்புகளிலிருந்து தெளிவாவது என்னவெனில்,
1) லேக்ராம் மரணத்தை தரக்கூடிய கடினமான ஒரு தண்டனையை சுவைப்பான்.
2) இந்த தண்டனை 1893 பிப்ரவரியிலிருந்து ஆறு ஆண்டுக்குள் கிடைக்கும்.
3) அந்த நாள் பெருநாளைக்கு ஒட்டிய (முந்தைய அல்லது பிந்தைய) நாளாக இருக்கும்.
4) சாமிரியின் கன்றுக்குட்டிக்கு ஏற்பட்ட நிலைமை லேக்ராமுக்கு ஏற்படும். அந்த கன்றுகுட்டி துண்டுதுண்டாக்கப்பட்டு, எரித்து, கடலில் வீசப்பட்டது.
5) இந்த தண்டனையை தருபவர் பயங்கர தோற்றத்தை கொண்ட சிவந்த கண்களை கொண்டிருப்பார்.
6) முஹம்மதின் வாளுக்கு லேக்ராம் இரையாவான்.

இந்த தண்டனை இவ்வாறு நிறைவேறியது.

1897-ல் சம்பவத்திற்கு சிலநாட்கள் முன்னர் சிவந்த கண்களை கொண்ட மனிதர் லேக்ராமிட்ம வந்து தாம் ”சுத்தி” செய்யப்பட விரும்புவதாக கூறினார். அவரது தோற்றத்தை குறித்து சிலர் எச்சரிக்கை செய்த போதும் லேக்ராம் அதனை பொருட்படுத்தவில்லை. அந்த மனிதர் லேக்ராமுடனே தங்கி அவரது நம்பிக்கைக்குரிய நண்பனாகி விட்டார். லேக்ராம் அவரது ”சுத்தி” க்காக பெருநாளைக்கு மறுநாளை அதாவது 6, மார்ச் 1897 (சனிக்கிழமை) நியமித்திருந்தான்.

சம்பவத்தின் போது அதாவது 6, மார்ச் 1897-ல் லேக்ராம் லாகூரில் வீட்டில் மாடியில் மாலை 6.00 மணி அளவில் எதையோ எழுதிக் கொண்டு இருந்தான். அப்பாது அந்த மனிதரிடம் தனக்கு தேவைப்பட்ட ஒரு நூலை எடுத்து கேட்டான். அதனை கொடுக்கும் சாக்கில் அந்த மனிதர் குறுவாளை லேக்ராமின் வயிற்றில் செருகியது மட்டுமல்லாமல் குடல்களெல்லாம் துண்டு துணடாகுமளவுக்கு அதனை சுழற்றினார். பின்னர் அந்த மனிதர் மறைந்துவிட்டார். இது சம்பவத்தை குறித்து லேக்ராமின் குடும்பத்தினரின் வாக்குமூலமாகும்.

சம்பவத்தின் போது லேக்ராம் மாடியில் இருந்தான். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த லேக்ராமின் தாயும், மனைவியும் கொலையாளி வீட்டில் மறைந்திருப்பதாக நம்பினர். கீழ்தளத்தில் வீட்டின் கேட் அருகே பலர் இருந்தனர். எவரும் கொலையாளி அங்கிருந்து தப்பி செல்வதை காணவில்லை. வீட்டை சோதனையிட்டபோது எவரையும் அங்கு காணவில்லை. கொலையாளி எந்த தடயமுமின்றி எப்படி மறைந்தார் என்பது வியப்பிற்குரிய விஷயமாகும்.

லேக்ராம் லாகூரில் உள்ள மாயோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக் கிழமை மிகுந்த வலியில் துடித்தவாறு மரணித்தான். பின்னர் அவனது உடல் தகனம் செய்யப்பட்டு அஸ்தி நதியில் கரைக்கப்பட்டது. இவ்வாறு அந்த முன்னறிவிப்பில் கூறப்பட்ட அனைத்து அம்சங்களும் நிறைவேறின.

லேக்ராமின் மரண ஊர்வலத்தை பெரிதாக நடத்திய ஆரியசமாஜி இயக்கத்தினர் இது திட்மிடப்பட்ட கொலை என்றும் மிர்ஸா சாஹிபுக்கு இதில் தொடர்பு உண்டு என்றும் கூறினர். பத்திரிக்கைகள் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் முன்னறிவிப்புகளை மீண்டும் வெளியிட்டதுடன் அன்னார மீது சந்தேகத்தை கிளப்பின.

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) இந்த சர்ச்சைக்கு இவ்வாறு முற்றுப்புள்ளி வைத்தார்கள். அவர்கள் தமது அறிக்கையில்,

இவ்வாறு கூறுபவர் காதியனுக்கு வர வேண்டும்
என்றும் அதற்கான செலவை தாமே ஏற்றுக்கொள்வதாகவும், பின்னர் இந்த திட்டமிடப்பட்ட சதி, இந்த கொலைசதியில் மிர்ஸா சாஹஜபுக்கு பங்கு உண்டு என்பதை நான் அறிவேன் என்று இறைவன் மீது ஆணையிட்டு கூறவேண்டும். அவ்வாறு அவர் கூறி ஒரு வருடத்திற்குள் இறைத்தண்டனைக்கு ஆளாகாவிட்டால் தமக்கு ஒரு கொலையாலிக்குரிய தண்டனையை தரலாம் என்றும் அறிவித்தார்கள். ஆனால் இதற்கு எவரும் முன்வரவில்லை.

கொலையாளியை கண்டுபிடிக்க போலீஸ் தரப்பிலிருக்தும் சமாஜ் தரப்பிலிருந்தும் இரண்டு கமிஷன்கள் அமைக்கப்பட்டன. ஆனால் எந்த தடயமும் சிக்கவில்லை. (ref: Arya Dharm – Hindu Consciousness in 19th Centuary Punjab , by Kenneth W Jones, Page 194)

லேக்ராமின் மரணம் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் உண்மைக்கு ஒரு ஓளி மிக்க சான்றும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை பழித்து பேசுவோருக்கு ஒரு எச்சரிக்கையுமாகும்

No comments

Powered by Blogger.