ஆங்கிலேயர்கள் பணத்தாசை காட்டி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை இஸ்லாத்திற்கு எதிராக தூண்டிவிட்டார்களா....?

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் எதிரிகள் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை நோக்கி, "ஆங்கிலேயர்கள் இவனை வைத்து பணத்தாசை காட்டி நிலபுலன்களை கொடுத்து இஸ்லாத்திற்கு எதிராக தூண்டி விட்டனர் என்றும் இதனாலதான் 1901 இல் அவர் தன்னை ஒரு நபி என்று வாதிட்டார்" என்ற ஒரு ஆட்சேபனையை எடுத்து வைக்கின்றனர். இதற்கான எங்களது முதல் பதில் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்பதாகும். ஆங்கிலேய ஆட்சி அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்திற்கோ அதன் தலைவருக்கோ ஏதாவது பணமோ, நிலமோ, சலுகையோ கொடுத்ததாக தகுந்த ஆதாரங்களுடன் இவர்களால் நிரூபித்து காட்ட முடியுமா..? இந்த பொய்க் குற்றச்சாட்டை நிரூபித்துக் காட்ட ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்கள் பலமுறை தமது எதிரிகளுக்கு சவால் விட்டிருந்தார்கள். ஆனால் அந்த அபாண்டமான பொய்யை மீண்டும் மீண்டும் கூறுகிறார்களே தவிர அதை இவர்களால் இதுவரை நிரூபித்துக் காட்ட முடியவில்லை. இவர்களால் இதனை இறுதி நாள் வரை நிரூபித்துக் காட்டவும் முடியாது.

ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் தமது வருகையின் நோக்கமே கிறிஸ்துவக் கொள்கையை சிலுவையை உடைப்பதுதான் என்று கூறியுள்ளார்கள். அதாவது, "நான் சிலுவையை உடைப்பதற்கும் பன்றியை கொள்வதற்கும் தான் அனுப்பப்பட்டுள்ளேன்." (பத்ஹே இஸ்லாம் பக்கம்: 12)
"கிறிஸ்துவர்களுடைய தெய்வத்தை மரணிக்க செய்யுங்கள். எதுவரை அவரை மரணிக்காமல் இருக்கின்றதாக கூறிக் கொண்டிருப்பீர்கள்? ஓர் எல்லை வேண்டாமா?" (இசாலாயே அவ்ஹாம் பக்கம்: 169)
பிரிட்டிஷ் அரசியாயிருந்த விக்டோரியா மகாராணிக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு கொடுத்து இவ்வாறு எழுதியிருந்தார்கள்:
"மகாராணியே! பாவமன்னிப்பு செய்யுங்கள். ஏக இறைவனின் வழிபாட்டில் வாருங்கள். அவனுக்கு மகனோ கூட்டாளியோ இல்லை. இந்த பூமியின் மகாராணியே! இஸ்லாத்தை ஒப்புக் கொள்ளுங்கள். அப்போதுதான் இரட்சிப்பு கிடைக்கும். நீங்கள் முஸ்லிமாகிவிடுங்கள்." (ஆயினாயே கமாலாதே இஸ்லாம் பக்கம்; 522)
வெள்ளையர்களையும் ஐரோப்பிய சமுதாயங்களையும் பாதிரிமார்களையும் முதல் முதலாக தஜ்ஜால் (Anti Christ) என்று கூறியதும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களே!
இவ்வாறு கிறிஸ்துவ அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக கூறியவரும் கிறிஸ்துவர்கள் வழிபடும் இயேசு மரணமடைந்து விட்டார் என்று கூறியவரும் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா அவர்களை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள அழைத்தவரும் ஆகிய ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களை, பிரிட்டிஷ் ஆட்சி நபியாக்கியிருக்கிறது என்று எவ்வாறு கூற முடியும்........!? கிறிஸ்துவ கொள்கைகளையே தவிடு பொடியாக்கிய ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களை கிறிஸ்துவ ஆட்சியான பிரிட்டிஷ் அரசு நபியாக்கியிருக்கிறது என்று கூறுவது மிகப்பெரிய வேடிக்கையாகும்.
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் பிரிட்டிஷ் ஆட்சியால் நியமிக்கப்பட்ட ஓர் இயக்கம் என்று குற்றம் சாட்டும் இந்த எதிரிகள் தனது ஆலிம்களை பற்றி ஆராய்ந்து பார்த்தால் பிரிட்டிஷ் ஆட்சியால் உருவாக்கப்பட்ட இயக்கங்கள் இவர்களுடையதுதான் என்பதை எளிதில் புரிய முடியும்.
1 - தாருல் உலூம் நத்வதுல் உலமாவின் மாதப் பத்திரிக்கையான அன்-நத்வா இவ்வாறு எழுதுகிறது:
" இந்த தாருல் உலூமிலிருந்து வெளிவரும் ஆலிம்களுடைய மிகப்பெரும் கடமை, ஆங்கிலேய ஆட்சியின் குணங்களையும் அருட்களையும் நன்கு உணர்ந்து நாட்டு மக்களுக்கு அரசின் குணங்களை எடுத்துக் காட்டி அதற்கு கீழ்படிவதின் அவசியத்தை பரவச் செய்ய வேண்டும் என்பதாகும்."
(அன்-நத்வா லக்னோ ஜூலை 1908)
2 - அஹ்லே ஹதீஸின் தலைவர் என்று தன்னை பற்றி கூறி கொண்டிருந்த மவ்லவி முஹம்மத் ஹுஸைன் பட்டால்வி கூறுகிறார்:
"இந்தியாவிலுள்ள முஸ்லிம்களுக்கு ஆங்கிலேய ஆட்சியை எதிர்ப்பது ஹராமாகும்."
    (இஷா அத்துஸ்ஸுன்னா பாகம் 6 பக்கம் 186)
3 - அஹ்ராரி இயக்கத்தின் தலைவர் மவ்லவி ஸஃபர் அலி கான் தன்னுடைய ஜமீன்தார் எனும் பத்திரிக்கையில் எழுதுகிறார்:
"ஜமீன்தார் பத்திரிக்கையும் அதனைச் சார்ந்தவர்களும் பிரிட்டிஷ் அரசை இறைவனுடைய நிழல் என்று கருதுகிறார்கள். நம்முடைய மதிப்பிற்குரிய அரசின் நெற்றியிலுள்ள ஒவ்வொரு துளி வியர்வைக்குப் பதிலாக தங்களுடைய உடம்பிலுள்ள இரத்தத்தைச் சிந்த தயாராக இருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களுடைய நிலையும் இதுதான்."
                    (ஜமீன்தார் 19-11-1911)
மீண்டும் அவர் எழுதுகிறார்: "முஸ்லிம்கள் ஒரு வினாடியாவது இந்த அரசுக்கு எதிராக தப்பெண்ணம் கொள்ள முடியாது. துரதிஷ்டவசமாக ஏதாவது ஒரு முஸ்லிம் அரசிற்கு எதிராக சூழ்ச்சியில் ஈடுபடுகிறார் என்றால் அந்த மனிதன் ஒரு முஸ்லிம் அல்லவென்று உரத்த குரலில் நாங்கள் கூறுகின்றோம்."
        (ஜமீன்தார்: 11-9-1911)
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தை பிரிட்டிஷ் அரசு உருவாக்கியதென்று பறைசாற்றும் இந்த எதிரிகள் தன்னுடைய முன்னோர்களுடைய இந்த அறிக்கையைப் பற்றி என்ன கூறப் போகிறார்கள்...?

No comments

Powered by Blogger.