உண்மையின் உரைகல்


ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் தமது வாதத்தில் உண்மையாளர்களே என்பதை நிரூபிக்கும் வகையிலான பல்வேறு ஆதாரங்கள் காணக் கிடக்கின்றன. அதில் ஒரு சில ஆதாரங்களை நாம் எமது இந்த பிளாக்கின் வாயிலாக பதிவு செய்துள்ளோம்.

இந்த கட்டுரையில் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களின் உண்மைக்கான ஐந்து ஆதாரங்களை நாம் கீழே காணலாம்.

முதலாவது ஆதாரம்: அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: 

"நிச்சயமாக ஒரு நீண்ட காலம் (நாற்பது வருடங்கள்) உங்களுடன் வாழ்ந்துள்ளேன், நீங்கள் சிந்திப்பதில்லையா?" (திருக்குர்ஆன் 10:17)

அதாவது இறைவன் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் உண்மையை நிரூபித்துக் காட்டுவதற்காக கூறினான். எனது வாதத்திற்கு முன்னுள்ள வாழ்நாளின் தூய்மையே நான் எனது வாதத்தில் உண்மையாளன் என்பதற்கு சான்றாகும் என்று மக்களிடம் நீர் கூறுவீராக.

ஒரு வாதியின் முன் வாழ்க்கையின் தூய்மை, பொய்யான இட்டுக்கட்டுகளில் இருந்து பரிசுத்தமாக இருத்தல் அவ்வாதி தனது வாதத்தில் உண்மையாளர் என்பதற்கு உரிய ஓர் ஆதாரமாகும் என்பது வெளிப்படை.

மேலும் இந்த ஆதாரம் அறிவுப்பூர்வமானது என்ற காரணத்தினால் நீங்கள் சிந்திப்பதில்லையா? என்று இறைவன் கூறியுள்ளான்.

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் மீது இல்ஹாம் இறங்கியது. நிச்சயமாக ஒரு நீண்ட காலம் உங்களுடன் வாழ்ந்துள்ளேன். நீங்கள் சிந்திப்பதில்லையா? (தஸ்கிரா பக்கம் 245)

அன்னாரின் வாதத்திற்கு முன்னுள்ள வாழ்வு கூட அவர்கள் தமது வாதத்தில் உண்மையாளர்; அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுபவரன்று என்று அறிவு பூர்வமாக வழிகாட்டுகிறது என்பதை இந்த இல்ஹாமில் இருந்து இறைவன் உண்மைபடுத்தியுள்ளான்.

இந்த வகையில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் இவ்வாறு பிரகடனம் செய்தார்கள். நீங்கள் எனது முன் வாழ்க்கையில் எந்த பலகீனம், இட்டுக்கட்டு, பொய் போன்றவையும் இருந்ததாக காட்ட முடியாது. ஒரு மனிதர் முதலில் இருந்தே பொய், இட்டுக்கட்டுகள் கூறும் வழக்கம் உள்ளவராக இருந்தால் இவ்விஷயத்திலும் அவர் பொய் சொல்லி இருக்கலாம் என்று நீங்கள் கருதலாம். உங்களில் எவராவது எனது முன் வாழ்க்கையின் சம்பவங்களில் இருந்து ஏதாவது குறை காண முடியுமா? இது என் இறைவனுடைய அருளாகும். அவன் ஆரம்ப காலத்திலிருந்தே என்னை தக்வாவின் மீது நிலை நிறுத்தினான். சிந்திப்பவர்களுக்கு இது ஓர் ஆதாரமாகும்.

(தத்கிரதுஷ் ஷஹாதத்தைன் பக்கம் 62)


வாக்களிக்கப்பட்ட மஸீஹின் தூய வாழ்விற்கான சாட்சிகள்

1- மவ்லவி ஸஃபர் அலிகான் சாஹிபின் தந்தையும் ஸமீன்தார் பத்திரிக்கையின் ஆசிரியருமான மவ்லவி சிராஜுத்தீன் சாஹிப் அவர்கள் வாக்களிக்கப்பட்ட மஸீஹின் நபி வாதத்திற்கு முன்னுள்ள வாழ்வு பற்றி எழுதுகின்றார்கள்:

"மிர்ஸா குலாம் அஹ்மது சாஹிப் 1860, 1861 ஆம் ஆண்டில் ஸியால்கோட் மாவட்டத்தில் (இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் இருந்த இந்தியாவில்) எழுத்தராக பணிபுரிந்தார். அக்காலத்தில் அவரது வயது 22 அல்லது 23 இருக்கும். நாம் மிகவும் அழுத்தமாக சாட்சி கூறுகிறோம். இளவயதில்  அவர்கள் மிகவும் நல்லடியாராகவும் இறையச்சம் உள்ளவராகவும், சான்றோர் ஆகவும் இருந்தார். 

(ஸமீன்தார் 8.6.1908)

2- மௌலவி முஹம்மது ஹுஸைன் சாஹிப் பட்டாளவி அஹ்லே ஹதீஸ் பிரிவைச் சேர்ந்த வழக்குரைஞர். அவர் வாக்களிக்கப்பட்ட மஸீஹின் பராஹீனே அஹ்மதிய்யா என்னும் நூலை பாராட்டி இவ்வாறு எழுதுகிறார்:

"இந்த நூலை எழுதியவர் இஸ்லாத்திற்காக பொருள், உயிர், எழுத்து, நாவு, நேரம், உதவிகளில் எந்த அளவுக்கு உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளாரோ அதற்கு ஒப்பானவர்களை முன்னிருந்த முஸ்லிம்களில் மிகவும் குறைவாகவே காண முடிகிறது.

(இஷாஅத்துஸ் சுன்னா தொகுதி 6 நவம்பர் 7)

மௌலவி சாஹிப் அவர்கள் இந்த குர்ஆனின் உரைகல்லை அலட்சியம் செய்துவிட்டு அன்னாரின் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்ற வாதத்திற்கு பிறகு அவர்களை மறுக்கத் தொடங்கினார் என்பது மிகவும் பரிதாபத்திற்குரிய விஷயமாகும்.

3- மௌலவி சனாவுல்லாஹ் சாஹிப் அமிர்தசரசி தனது "தாரீகே மிர்ஸா" (மிர்ஸாவின் வரலாறு) என்ற நூலில் 53 ஆம் பக்கத்தில் இவ்வாறு எழுதுகிறார்:

"பராஹீன் (என்ற நூலை எழுதும்) வரை நான் மிர்ஸா சாஹிப் மீது நல்லெண்ணம் கொண்டிருந்தேன். எனக்கு 17 அல்லது 18 வயதாகும் போது ஒருமுறை அவரை சந்திக்கும் ஆவலில் தனியாக நடந்தே காதியான் சென்றுள்ளேன்."

இரண்டாவது ஆதாரம்: அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்:

"அல்லாஹ்வுக்கு எதிராக பொய்யை இட்டுக்கட்டுபவனை விடவும் அல்லது அவன் அடையாளங்களை பொய்யாக்குபவனை விடவும் பெரும் அநீதி இழைப்பவன் எவன்? நிச்சயமாக குற்றவாளிகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. (திருக்குர்ஆன் 10:18)  

அல்லாஹ்வுக்கு எதிராக பொய்யை இட்டுக்கட்டாதீர்கள். (ஏனெனில்) அவ்வாறு செய்தால் அவன் உங்களை ஏதேனும் தண்டனையின் மூலம் அழித்துவிடலாம். (திருக்குர்ஆன் 20:62)

இந்த வசனங்களிலும், இஸ்லாத்தில் எதிரிகளுக்கு எதிராக, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் வெற்றியையே அன்னாரின் உண்மைக்கு ஆதாரமாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது. ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூட தமது கடும் எதிரிகளுக்கு எதிராக அதே வெற்றியை பெற்றுள்ளார்கள். அது அன்னாரின் வெற்றிக்கு ஒளியூட்டும் ஆதாரமாகும். அன்னாரின் எதிரிகள் எல்லா கோணத்திலும் அவர்களுக்கு எதிரில் ஒன்றுமற்றவர்களாக இருக்கின்றனர். குஃப்ர் ஃபத்வா கொடுத்தனர். நீதிமன்றங்களில் வழக்கு போட்டனர். அவர்களுக்கு எதிராக பொய்யை பரப்பி தவறான எண்ணத்தை மக்களிடம் உருவாக்கினர். இவற்றினால் கூட அவர்கள் வெற்றி பெற முடியவில்லை. அல்லாஹ் அவர்களுக்கு வாக்களித்ததற்கு ஏற்ப முஸ்லிமகளுடைய ஒரு மகத்தான ஜமாஅத்தை அவர்களுக்கு வழங்கினான். அந்த ஜமாஅத் இஸ்லாத்திற்கு சேவை செய்யும் ஓர் உத்வேகத்தை தம்மிடம் கொண்டுள்ளது. இஸ்லாத்தை முஸ்லிமல்லாதவர்களுக்கு எடுத்து வைத்து முஸ்லீம்களை உருவாக்குவதில் உறுதியான வெற்றியை பெற்றுள்ளது.

மூன்றாவது ஆதாரம்: நானும் என் தூதர்களும் வெற்றி பெற்றே தீருவோம் என அல்லாஹ் விதித்துள்ளான். (திருக்குர்ஆன் 58:22)

தூதர்களாகிய நம் அடியார்களைக் குறித்து நம் தீர்ப்பு ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. (திருக்குர்ஆன் 37:172)

நாம் அவர்களின் நாட்டை அதன் எல்லைகளில் இருந்தும் சிறிதாக்கிக் கொண்டே வருவதை அவர்கள் காண்பதில்லையா? இவ்வாறிருக்க அவர்களால் வெற்றி பெற முடியுமா? (திருக்குர்ஆன் 21:45)

மேற்கண்ட இறை வசனங்களிலிருந்து தெரிவது என்னவென்றால் நபிமார்கள் மற்றும் அவர்களின் ஜமாஅத்தினர் எதிரிகளின் மீது கண்டிப்பாக வெற்றி பெறுகின்றனர். எல்லா புறத்தில் இருந்தும் அவர்களுக்கு இறைவனுடைய உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது.

எதிரிகள் எல்லா புறத்திலிருந்தும் சுருக்கப்படுகின்றனர். இறைவனால் அனுப்பப்பட்ட ஜமாஅத் படிப்படியாக வளர்ந்து கொண்டே செல்கிறது.

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் மற்றும் அவர்களின் ஜமாஅத்திற்கு அன்னாரின் எதிரிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு தோன்றியிருந்தது. ஆனால் எதிரிகள் தமது அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்திவிட்ட பிறகும் கூட அவர்களின் ஜமாஅத்துக்கு அல்லாஹ் ஆதரவையும் வெற்றியையும் வழங்கினான்.

நான்காவது ஆதாரம்: நாம் அவரையும் (அவருடன்) அக்கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம். மேலும் நாம் இதனை உலக மக்களுக்கெல்லாம் ஓர் அடையாளமாகவும் ஆக்கினோம். (திருக்குர்ஆன் 29:16)

ஹஸ்ரத் நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் அவர்களின் எதிரிகளின் மீது வெள்ளப் பெருக்கு ஒரு தண்டனையாக வந்தது. ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் காலத்தில் அவர்களின் முன்னறிவிப்பிற்கேற்ப பிளேக் நோயின் தண்டனை வந்தது. ஆயிரக் கணக்கானோர் மடிந்தனர். நகரங்களும் கிராமங்களும் பாழடைந்தன. மக்கள் காடுகளில் அடைக்கலம் புகுந்தனர். ஏனெனில் வீடுகள் பிளேக் கிருமிகளின் தலைமையகமாக விளங்கின. பிளேக்கின் வெள்ளம் எல்லா புறத்திலிருந்தும் அழிவை அழைத்து கொண்டு வந்தது.

அவ்வேளையில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் இல்ஹாமை இறக்கினான். "இன்னி உஹாஃபிழு குல்ல மன் ஃபித்தார்" (தஸ்கிரா பக்கம் 429) இந்த வீட்டின் நான்கு சுவர்களுக்குள் இருப்பவர்கள் அனைவரையும் நான் பாதுகாப்பேன். மேலும் கூறினான்: "உஹாஃபிழுக்க காஸ்ஸத்தன்" (தஸ்கிரா பக்கம் 427 பதிப்பு 1949) அதாவது நான் உன்னை சிறப்பான முறையில் பாதுகாப்பேன். இந்த அடையாளம் தெளிவாக நிறைவேறிற்று.

கப்பல் தண்ணீரில் இருந்து காப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு நேர்மாற்றமாக பிளேக் என்ற வெள்ளத்தின் போது வீடு அழிவை தரும் இடமாக ஆகியது. ஆனால் மற்றவர்களுக்கெல்லாம் அழிவைத் தந்து கொண்டிருந்த வீட்டை அல்லாஹ் வாக்களிக்கப்பட்ட மஸீஹிற்கு பாதுகாப்பை தரும் வீடாக மாற்றினான். பிளேக் நோயின் காலத்தில் சுமார் 80 பேர் அன்னாரின் வீட்டில் இருந்தனர். சுற்றியிருந்த வீடுகளில் எல்லாம் பிளேக் நோயின் மரணங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் தாருல் மஸீஹ் என்ற மஸீஹின் வீட்டில் இருந்தவர்களில் ஒருவரும் மரணிக்கவில்லை. அல்லாஹ் மிகப் பெரும் அடையாளமாக தனது வாக்குறுதியை நிறைவேற்றினான். அல்லாஹ் மிகத் தெளிவாக தனது பாதுகாப்பு பற்றிய வாக்குறுதியை நிறைவேற்றினான்.

ஐந்தாவது ஆதாரம்: அவர் எந்த சொல்லையாவது பொய்யான வெளிப்பாடாக எம்மீது சுமத்தியிருந்தால் நிச்சயமாக நாம் அவரை வலக்கையால் பிடித்திருப்போம். பின்னர் நிச்சயமாக அவரது கழுத்துப் பெருநரம்புக் குழாயை துண்டித்திருப்போம். (திருக்குர்ஆன் 69:45-47)

அல்லாஹ் கூறுகிறான்:  ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு தனது வஹீ இல்ஹாம்களை படைப்பினங்களின் முன் எடுத்து வைத்து விட்டு 23 ஆண்டு கால நீண்ட அவகாசத்தையும் பெற்றிருந்தார்கள். அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டு வந்தார்கள். இது அவர்கள் தமது வஹீ இல்ஹாமின் வாதத்தில் பொய்யரன்று என்பதற்கான வலுவான சான்றாகும்.

இது ஓர் வலுவான, பிரபலமான ஆதாரமாகும். ஏனெனில் இந்த இடத்தில் ஆதாரம் தரப்பட்டு இருப்பவர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) ஆவார்கள். எனவே, பொய்யாக, இறைவன் மீது வஹீ வந்ததாக இட்டுக்கட்டினால் அம்மனிதர் இருபத்து மூன்று ஆண்டுகால அவகாசத்தை பெற முடியாது மாறாக அவர் அழிக்கப்படுவார். ஏனெனில் பொய்யான வஹீ இல்ஹாம் எத்துணை ஆபத்தானது எனில் அவர் சில விஷயங்களை தன் சார்பாக கூறி இறைவன் கூறியதாக வழிகாட்ட முடியும். எனவே அம்மனிதர் இறைபிடியில் இருந்து தப்ப முடியாதவாறு அல்லாஹ் அவரை பிடித்திருப்பான்.

இந்த ஆதாரத்தை ஹஸ்ரத் மாநபி (ஸல்) அவர்களின் எதிரிகளுக்கு மட்டும்தான் எடுத்து வைக்க முடியும். ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு இந்த அளவுகோல் பொருந்தாது என்று கூறுபவர்களிடம், இஸ்லாத்தின் எதிரிகளின் கேள்விக்கு எந்த பதிலும் இல்லை. ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) நஊதுபில்லாஹ் பொய்யாக இல்ஹாம் வருவதாக வாதித்து 23 ஆண்டு காலத்திற்கு மேல் வாழ்ந்திருக்கும் போது இந்த ஆதாரத்தை ஹஸ்ரத் மாநபி (ஸல்) அவர்களின் உண்மைக்கு ஆதாரமாக எப்படி கூற முடியும்? பொய்யாக வாதிப்பவரும் 23 ஆண்டுகாலம் வாழ முடியுமெனில், உண்மையான நபிக்கு ஆதாரமாக ஹஸ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் உண்மைக்கு ஓர் ஆதாரமாக எப்படி இதனை கூற முடியும் என்பதை அறிவுடையோர் சிந்திப்பார்களா?

ஆக்கம்: M. பஷாரத் அஹ்மது சாஹிப்
உதவியது: சமாதான வழி 34 வது மலர் ஆகஸ்டு 2004 இதழ் 11 

5 comments:

  1. ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை)அவர்கள் உண்மையாளர்,இறைவன் புறமிருந்து ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பிற்கு ஏற்ப தோன்றியவர் எனபதற்கு அருமையான மேற்கோள்கள்க.இதனை படிக்கும் நன்மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக.ஆமீன்

    ReplyDelete
  2. ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை)அவர்கள் உண்மையாளர்,இறைவன் புறமிருந்து ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பிற்கு ஏற்ப தோன்றியவர் எனபதற்கு அருமையான மேற்கோள்கள்க.இதனை படிக்கும் நன்மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக.ஆமீன்

    ReplyDelete
  3. வஜாஹத் அஹ்மது, சென்னைAugust 25, 2020 at 3:43 AM

    மிக அருமையான கட்டுரை. ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை...) அவர்களின் உண்மைக்கு திருக்குர்ஆன் வசனங்களின் அடிப்படையில் மறுக்க முடியாத ஆதாரங்கள்.

    ReplyDelete
  4. ஹஸ்ரத் இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய சிறு கட்டுரை படிப்பவர்களின் உள்ளங்களில் ஈமானை வலுப்பெறவும்

    மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மார்க்கத்தை மீண்டும் இவ்வுலகத்திற்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தவும்

    வந்தவர்கள் இமாம் மஹ்தி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் ஆவார்கள்.

    என்பதை இககட்டுரையின் மூலம் அறிந்து கொள்ளலாம்!

    ஜஸாக்கல்லாஹ்!

    ReplyDelete

Powered by Blogger.